tamilnadu

img

ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.1 கோடி மோசடி

சேலம்:
சேலத்தில் ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.1.69 கோடி மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 39). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில், சேலம் அய்யந்திருமாளிகையை சேர்ந்த சுகவனம் (45) என்பவர் தன்னிடம் பணம் முதலீடு செய்தால் ஆன்லைன் வியாபாரம் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன் என்றார்.

இதை நம்பி நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ரூ.7 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அவர் இரட்டிப்பு பணம் எதுவும் வழங்கவில்லை. இதனிடையே ரூ.6 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் திரும்ப கொடுத்தார். மீதமுள்ள ரூ.1 கோடியே 69 லட்சத்து 70 ஆயிரம் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். தற்போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார் என கூறப்பட்டிருந்தது.இந்த புகார் பற்றி விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு காவல்துறை ஆணையர்  செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில்  உதவி ஆணையர் பூபதிராஜன் மற்றும்போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுகவனம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சிவசக்தி உள்பட 4 பேரிடம் ரூ.1 கோடியே 69 லட்சத்து 70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுகவனம் மற்றும் அவருடைய தந்தை, தாய், மனைவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் சுகவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.1,666 வீதம் 120 நாட்களுக்கு கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை நம்பி அவரிடம் சிவசக்தி மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.
சுகவனத்திடம் வேறு யாராவது பணம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.