மதுரையில் செங்கொடியேற்றும் பெண் கம்யூனிஸ்ட்டுகள்
மதுரை, நவ. 6- உலகெங்கிலும் மகத்தான சோவியத் புரட்சியை நினைவுகூரும் விதமாக நவம்பர் 7 புரட்சிதின கொண்டாட்டங்கள் வியாழனன்று நடைபெறுகின்றன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் 102 -ஆவது நவம்பர் புரட்சித் தின கொடியேற்று விழா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா வியாழனன்று நடைபெறுகிறது.
இதில் பழங்காநத்தம், ஜெய்ஹிந்துபுரம், தெற்கு வாசல், முனிச்சாலை, மத்திய பகுதி, மேலப்பொன்னகரம், அரசரடி, செல்லூர், மீனாம்பாள்புரம், புதூர் - அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிக்குழுக்களில் 70 இடங்களில் பெண் கம்யூனிஸ்ட்டுகள், நவம்பர் புரட்சி தின கொடியினை ஏற்றி வைக்கின்றார்கள். மாலையில் ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்கும் செஞ்சட்டைப் பேரணி புறப்பட்டு ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நிறைவடைந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.