ரூ.300 கோடி மோசடியை சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு... இராமநாதபுரம் எஸ்.பி பதிலளிக்க உத்தரவு
மதுரை:
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நடைபெற்ற ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கலான மனுவுக்கு இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கையை சேர்ந்த ஜெயா, இளையான்குடியைச் சேர்ந்த முத்துகண்ணன், தேவகோட்டையைச் சேர்ந்த செல்லப்பன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:இராமநாதபுரத்தில் ஆனந்த், அவர் மனைவி காயத்ரி, நீதிமணி, அவர் மனைவி மேனகா ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர். எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என தெரிவித்தனர்.இதை நம்பி இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் ரூ.300 கோடி அளவுக்கு முதலீடு செய்தனர். பின்னர், அந்தப் பணத்துக்கு முறையாக வட்டி வழங்காமல் மோசடி செய்தனர்.மோசடியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் விசாரணை மெதுவாக நடைபெற்றுவருகிறது. பணம் முதலீடு செய்தவர்கள் பணம் திரும்பக்கிடைக்காமல் பொருளாதாரரீதியில் கடும் சிரமத்தில் உள்ளனர். மோசடியில் தொடர்புடையவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பலர் உதவி வருகின்றனர்.எனவே, காவல்துறை விசாரணை நியாயமாகநடைபெற வாய்ப்பில்லை. எனவே, இந்த வழக்கைசிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரித்து, இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
*************
நீட் தேர்விற்கு எதிராக போராடியவர்கள் கைது
மதுரை:
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி யும் மதுரையில் நாம்தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம், மக்கள் பாதைஇயக்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளியன்று நடைபெற்றது. இரண்டு போராட்டங்களிலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதியில்லாததால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவேண்டும் என காவல்துறையினர் மிரட்டினர், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.