சென்னை,அக்.10- ஆளும் கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாத அலுவலர் களை பணி மாற்றம் செய்து வரும் அரசின் அதிகார அத்து மீறல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:- மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மாற்றம் தொடர் பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மாவட்ட ஆட்சியர்களை மாற்றுவது அரசின் கடமைப் பொறுப்பு. எனினும் ஆட்சி நிர்வாகத்தில் அரசியல் தலையீடு காரண மாக ஆட்சிப்பணி அதிகாரிகள் மாற்றப்படுவது நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலைத்து விடும்.
நேர்முகத் தேர்வு முடக்கி கிடப்பில் போட்டு வைத்தி ருந்த அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்தை செய்ததைத் தொடர்ந்து ஆளும் கட்சியினர் கொடுத்த அரசியல் அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர் மாற்றம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை மாவட்ட ஆட்சியர்களை மாற்றி, மாற்றி நியமனம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகள் ஆழமான சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.