tamilnadu

img

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம். டிஜிபியாக திரிபாதி நியமனம் !

தமிழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகமும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை ஆணைய டிஐஜி ஜே.கே. திரிபாதி அகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம், ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலமும் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.   இந்நிலையில், புதிய தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டது. 
இந்நிலையில் இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அரசானையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில்  நிதித்துறை செயலாளர் சண்முகம், அரசின் புதிய தலைமைச் செயலாளராகவும். சீருடை ஆணைய டிஐஜியாக உள்ள ஜே.கே. திரிபாதி, மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் .
சண்முகம்: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் சண்முகம். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும் இவரே. 1985ம் ஆண்டில் தஞ்சாவூரில் பயிற்சி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப் கலெக்டராக பணியாற்றினார். பின்னர் வணிகவரித்துறை துணை கமிஷனர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், குடிமைப்பொருள் கார்ப்பரேசன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், உணவுத்துறை செயலர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பின் 2010ம் ஆண்டிலிருந்து நிதித்துறை செயலர் பொறுப்பை வகித்து வருகிறார். நிதிச்சிக்கலில் தவித்தபோது தனது நிர்வாகத்திறமையால், ஆட்சியை இக்கட்டிலிருந்து மீட்டுள்ளார். இவரது தலைமையில் 9 பட்ஜெட்டுகள் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகளை மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ளன.  தற்போது தமிழக அரசின்  46 வது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளர்.
ஜே.கே. திரிபாதியின் : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாதி முனைவர் பட்டம் படித்து பேராசிரியராக பணியாற்றி மூன்றாவது முயற்சியிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இவரும் 1985 பேட்சை சேர்ந்தவர் ஆவார். ஸ்காட்லாந்து உள்ளிட்ட 2 நாடுகளின் சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார். தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல்துறை உயர்அதிகாரி பொறுப்பை வகித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பணியாற்றிவருகின்றார். இவர் தற்போது தமிழகத்தின்  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.