சென்னை, அக். 19 - ஓய்வூதியர்களுக்கும் 5 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிதித்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.19 முதல் 5 விழுக்காடு அகவிலைப்படி ரொக்கமாக வழங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர்களுக்கும் வழங்க அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, தீபாவளி நெருங்கி வரும் சூழலில், ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க உத்தரவிடும்போதே ஓய்வூதியர்களையும் இணைத்து வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.