சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 8- நிலைமை சீரடையும் வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பெற்றோர்களும் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத்கூடாது, ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் ஜூன் 15ம் தேதிக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கூடுதலாகி வருகின்றன. மாணவர்களும் இயல்பான மனநிலையில் இல்லை. இந்த மோசமான சூழ்நிலையில், ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பொருத்தமாக இருக் காது. நோய்ப் பரவல் அதிகரிப்பதற்கு இது ஒரு வாய்ப் பாக அமைந்துவிடும் என்ற அச்சம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளது.
தனிமனித விலகலோடு தேர்வை நடத்த உள்ளோம் என்று அரசு கூறினாலும் கூட, தேர்வை நடத்துவதன் மூலம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நோய் பரவுவதற்கான அபாயம் உள்ளது. அது மட்டுமில்லா மல், தினசரி நோய்ப் பரவல் அதிகரித்து வருகிற காரணத் தால், மாணவர்களுக்கு இயல்பான தேர்வு எழுதும் மனநிலை இருக்காது. பெற்றோர்களும் அச்சத்துடன்தான் அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். எனவே, ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது ஒத்தி வைக்க வேண்டு மெனவும், நிலமை சீரடைந்த பிறகு பொதுத்தேர்வை நடத்த லாம் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தேர்வை ஒத்திவைத்தால் தான் என்ன?
அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜூன் 8 தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 11ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம், பட்ட தாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்களன்று (ஜூன் 8) நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரி வித்தனர். அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறி ஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, தமிழகத்தில் வரும் நாட்ககளில் கொரோனா அதிகரிக்கும் என்பதால், இதுவே 10 வகுப்பு தேர்வை நடத்த சரியான நேரம் என்றும், தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக அரசு தரப்பில் தேர்வு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அக்டோபரில் உச்சநிலை
‘கொரோனா பாதிப்பை பொருத்தவரை தற்போது அபாய நிலை இல்லை. அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ள னர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவ தால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது, பேராபத்தாக முடியும். நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன. மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது.எனவே தமிழகத்தில் தேர்வை நடத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்?. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிப்ப தால் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என்பது குறித்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும் என்றனர். இதன் பின்னர் பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அன்றைய தினம் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
10 லட்சம் மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காமல் கொரோனா தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளதால், இப்போதே தேர்வு நடத்தி முடிப்பது நல்லது என்றும் தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் தேர்வின் போது மத்திய அரசின் வழிக்காட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு வாதிடுகிறது. அதே நேரம் மாணவர்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் யார் பொறுப்பு என்ற நம் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதும் சராசரியாக தினமும் பத்து பேர் மரணிப்பதும் ஆபத்தற்ற சூழல் என எடப்பாடி அரசு நம்புகிறதா?
அரசின் இந்த வாதத்தை முதலில் பொது சுகாதாரத்துறையால் ஏற்க முடியுமா? தமிழகத்தில் நோய் தொற்று கொடூரமான முறையில் பரவி தமிழகம் இந்திய அளவில் நோய் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தச் சூழலில் பொதுத் தேர்வுகள் நடத்த அரசு தீவிரம் காட்டுவது அடிப்படை அறமற்ற செயல். இந்தத் தீவிரமான நோய் தொற்றுக் காலத்தில் இன்னமும் பொது ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மாணவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்து தேர்வெழுத வைக்கிறோம் என சொல்வது மாணவர்கள் உயிருடன் அரசு நடத்திப் பார்க்கும் விளையாட்டே அன்றி வேறில்லை. இந்த பேராபத்தை தடுக்க வேண்டியே இந்திய மாணவர் சங்கம் களத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வருகிறது.
இந்திய மாணவர் சங்க தலைவர்கள் ஏ.டி.கண்ணன்,
வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...