மதுரை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்வை தள்ளி வைக்கக் கோரி தென்காசியைச் சேர்ந்த கனகராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புதனன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு மனுதாரர் கூறியபடி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பிரச்சனை உள்ளது. தேர்வை ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், மாணவர்கள் நலன் கருதியே 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்றனர்.