இராமநாதபுரம்:
கொரோனாவால் பாதிக்கப் படாதவர்களே இல்லை. இந்தச் சூழலில் விபத்து, தற்கொலை, ரயில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர் களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் உரியபாதுகாப்பு உடையணிந்து உடற்கூராய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களுக்கு உதவியாக தூய்மைப் பணி யாளர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் திருவாடானை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பணியில் மருத்துவருக்கு உதவியாளராக செயல்படும் பண்ண வயல் மகாலிங்கம் அரசு வழங்கும் மாதச் சம்பளம் ரூ.4,000 பெற்றுக்கொண்டு வறுமையின் பிடியில் வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரைப் போன்று தமிழகம் முழுவதும் உடற்கூராய்வு பணியில் மருத்துவருக்கு உதவியாக ஏராளமான தூய்மைக் காவலர்கள் பணி யாற்றி வருகின்றனர்.தனது பணி குறித்து மகா லிங்கம் கூறியதாவது:-2005-ஆம் ஆண்டு இந்தப் பணியில் சேர்ந்தேன். நான் ஒருவர் மட்டுமே இந்தப் பணியில் உள்ளேன். எனக்கு நல்லமுத்து என்ற மனைவியும் முத்துபாலகிருஷ்ணன் (23) என்ற மகனும் முகில் ஆர்த்தி (21), அனிதா முகில் (19) என மூன்று பிள்ளை கள் உள்ளன.
இந்த குறைவான சம்பளத்திலும் எனது பிள்ளைகள் அனைவரும் அரசுப்பள்ளிகளில் படித்து தற்போது அரசுக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். எனது குழந்தைகளை கைதூக்கி விட்டது அரசுப்பள்ளியும், அரசுக்கல்லூரிகளும் தான். அரசு பள்ளி, கல்லூரிகள் இல்லையென்றால் என்னைப்போன்ற வர்களின் வீட்டுப்பிள்ளைகள் படித்து மேல்நிலைக்கு வருவது சிரமம். வருடத்திற்கு திருவாடானை மருத்துவமனையில் 60 முதல் 70 உடல்கள் உடற் கூராய்வு செய்யப்படுகின்றன. இதுவரை ஆயிரம் உடல்கள் உடற்கூராய்வு செய்யப் பட்டுள்ளது. அத்துணைக்கும் நான் மருத்துவருக்கு உதவிபுரிந்துள்ளேன். இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்பு உடைஅணிந்து பணிகளை செய்துவருகிறேன். ஆடு, மாடு வளர்க்கிறேன். அரசு கொடுக்கும் ரூ.4 ஆயிரத்தில் ஐந்துபேர் வாழ்வது மிகவும் சிரமம். எனவே உடற்கூராய்வு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கினால் சிரமமின்றி எங்களது வாழ்க்கை செல்லும் என்றார். தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் இதுபோன்ற பணியில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளத்தை உயர்த்திவழங்க நடவடிக்கை எடுப்பார்களா?