தமிழகத்தின் தென்கோடியில் தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் வட்டத்தில், ஆறுமுகநேரியிலிருந்து காயல்பட்டினம் செல்லும் சாலைப்பகுதியில் அமைந்துள்ளது ஏஐடியுசி காலனி. இக்காலனி உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலை உட்பட நகரின் முக்கியப்பகுதிகளில் பணிபுரிந்து வந்த உழைக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தை வேலைக்குச் செல்லும் பகுதிக்கு மையத்தில் அமைத்துக்கொள்ள முடிவு செய்து குடியேறிய பகுதியே ஏஐடியுசி காலனி. இக்காலனி தற்போது ஒரு நவீன சமத்துவபுரமாக விளங்கி வருகிறது. அரசாங்கம் திட்டங்கள் தீட்டி உருவாக்க முடியாத ஒரு உண்மையான சமத்துவபுரத்தை இங்கே காணலாம். அதற்குக் காரணம் இங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பதே. எந்த சாதி எந்த மதம் என்று இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் எவ்வித முரண்பாடுகளுமின்றி வாழ்ந்துவரும் பகுதி இந்த காலனி. தமிழக அரசாணை எண்: 50, நாள்:8.4.1999 -ன்படி, சமத்துவபுரத்திட்டமானது பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம் என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சமத்துவபுரத்துக்கும் தலா 3 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் வீதம் அமைக்கப்பட்டன. இந்த 100 வீடுகளில் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 40 வீடுகளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தலா 25 வீடுகளும், இதர சமூக மக்களுக்கு 10 வீடுகளும் இலவசமாக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பொது விளையாட்டு மைதானம், பூங்கா போன்றவையும் அன்றைய அரசால் அமைத்துத் தரப்பட்டன. அரசாங்கம் அமைத்த சமத்துவபுரங்கள் மக்களுக்குச் சிறிய அளவில் பயன்பட்டாலும் கூட அதன் இருப்பிடம், மற்றும் மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரமுடியாமை, பொருளாதாரம் முன்னேற்றமின்மை போன்ற காரணங்களால் சமத்துவபுரத்தில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில் இந்த காலனி போன்ற இயற்கையான சமத்துவபுரங்கள் உருவாகி வருவது உவகை தரும் நிகழ்வாகும். சமத்துவபுரம் அமைக்கும் திட்டத்தின்படி, 1998 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி, தமிழக அரசால் முதல் சமத்துவபுரம் மேலக்கோட்டை என்ற பகுதியில் துவங்கப்பட்டது. அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் வண்ணம் சமத்துவ புரம் என்னும் குடியிருப்புகளை அரசு உருவாக்கியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக்காலத்தில் சமத்துவபுரங்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த குடியிருப்புகளில் அனைத்து சாதியினருக்கும் இலவச குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. மக்களின் பேதங்களை விரட்டும் வண்ணம் அனைவருக்கும் பொதுவான சமூக அரங்கம், இடுகாடுகள் இந்த சமத்துவபுரம் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டது. சமூக நீதியை நிலைநாட்டவும், சாதிய வேறுபாடுகளைக் களையவும் சமத்துவபுரங்கள் முக்கிய காரணியாக அமைந்தன. ஆனால், அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலை மேம்பட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால் சமத்துவபுரங்கள் தங்களின் இலட்சியத்தை அடைய இயலவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ள சமூகத்தில் சமத்துவம் நிலவ இயலாது. இந்நிலை மாற அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்மையான தேவை பொருளாதார சமூகநீதியே ஆட்சியாளர்கள், அறிவியல் வேலைவாய்ப்பு, மக்கள் நலன், வளர்ச்சி அதாவது மக்களுக்கான வளர்ச்சி என்று கொண்டு செல்ல வேண்டிய தேசத்தை எங்கே கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நாடு என்றால் மக்கள் என்பதை அனைத்து அரசுகளும் உணர்ந்து உலகத்து மக்களெல்லாம் உண்மையான சமத்துவம் பெற வரும் புத்தாண்டு வழிகாட்டட்டும்.