tamilnadu

img

இராமாநாதபுரம் மாவட்டத்தில்  இரண்டு பேருக்கு கொரோனோ? தனிமையில் 2,714 பேர்

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில்  இருவருக்கு கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளனர். வெளிநாடுகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,125 பேர் திரும்பியுள்ளனர்.  1,428 நபர்கள்  கொரோனா அறிகுறி ஏதும் இல்லாளமல் நலமுடன் உள்ளனர்.  2,697 பேர்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

 வெளி மாநிலங்களிலிருந்து 761 நபர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.  இவர்கள் ஆங்காங்கே உள்ள பொது கட்டடங்களில் தனிமைப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய உணவு, குடிநீர், உடை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.   தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் பங்கேற்றுள்ளனர்.   அதில் 17 பேர் மட்டும் இராமநாதபுரம் திரும்பியுள்ளனர்.  இவர்கள் அனைவரையும்  தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அவர்களது குடும்பத்தினரை அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மேற்குறிப்பிட்டுள்ள 17 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதில் இரண்டு பேர் கொரோனா  அறிகுறிகளுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பரமக்குடியைச் சேர்ந்த 61 வயது ஆண், 70 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குறிப்பிட்டுள்ள 17 பேரின் குடியிருப்புகளிலிருந்து ஏழு கி.மீ. சுற்றளவிற்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று பரிசோதனை மற்றும் அறிகுறி கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
-நமது நிருபர்