tamilnadu

img

பயங்கரவாதத்தின் பசி

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் உவந்து கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் நிகழ்ந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகள் அந்த தீவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையே அதிரச் செய்துள்ளது. தேவாலயங்கள் உட்பட எட்டு இடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள குண்டுவெடிப்பில் 207 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதும் மத அடிப்படையிலான பயங்கரவாதம்தான் இந்தத் தாக்குதலுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.உள்நாட்டு போரின் காரணமாக இலங்கை இழந்தது அதிகம். தொடர்ச்சியான மோதல் காரணமாக அந்த நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்தது. இயற்கை எழில் ததும்பும் அந்த நாடு குண்டு சத்தத்தால் அதிர்ந்து கொண்டே இருந்தது. 


இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையில், இயல்பான, ஜனநாயகப்பூர்வ, சகஜ வாழ்வையே அந்த நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரியவந்தது. எனினும் ஆட்சிக்கு வந்தவர்கள் ஜனநாயகத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இன மற்றும் மத அடிப்படையிலான பகைமையை முற்றாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு முழு மனதுடன் முயற்சி மேற்கொள்ளவில்லை.போரினால் கடும் இன்னலுக்கு உள்ளான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்னமும் ராணுவத்தின் பிடியிலிருந்து முற்றாக விடுபட வில்லை. தமிழ் மக்களின் நிலம் அவர்களிடம் முற்றாக ஒப்படைக்கப்பட வில்லை. நேரடியான போர் இல்லை என்ற போதிலும் மக்களின் மனப்புழுக்கம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.


தமிழ் மக்களின் நியாயமான, ஜனநாயகப்பூர்வ உரிமைகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக இலங்கையில் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் மறுபுறத்தில் பெரும்பான்மை சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை வளர்த்துவிடுவதில் முனைப்பு காட்டினார்கள். இது தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமின்றி இலங்கையில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடித்து வெளியே வந்தது. இப்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் அவர்களது பண்டிகை நாளில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு பெரும்பான்மை மத மற்றும் இன பயங்கரவாதம் காரணமாக இருக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனினும் முழுமையான விசாரணைக்குப் பிறகே முழு உண்மை வெளிவரும்.ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. பயங்கரவாதம் என்பது எந்தப் பெயரில் வளர்க்கப்பட்டாலும் அதுஅனைத்துப் பகுதி மக்களுக்கும் எதிரானது. அனைத்து மதங்களும் அன்பையே முன்வைப்ப தாக கூறுகிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் அரசியல் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களது குறுகிய நலனுக்காக பகைமைத் தீயை மூட்டிவிட்டு மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் அமைதி திரும்புவதும், அனைத்துப் பகுதி மக்களும் நிம்மதியாக வாழ்வதும் உறுதி செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத்தின் பசிக்கு மனிதர்கள் இரையாவது நிறுத்தப்பட வேண்டும்.