இராமநாதபுரம்
2009 முதல் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் ஊழியர்களை குடிநீர் வடிகால் வாரியம் நேரடியாக எடுக்காமல் கமிஷன் பெறுவதற்காக ஒப்பந்தக்காரர்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் சுமார் 31 கோடி ரூபாயை குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் மோசடி செய்துள்ளார்கள். மோசடியில் ஈடுபட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது ஊழியர்கள் சம்பளத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்து, நடவடிக்கை எடுத்து ஊழியர்களுக்கு உரிய ஊதியத்தை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 14ஆம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரிசி, பருப்பு, பாத்திரங்கள், பாய் தலையணையுடன் குடியேறும் போராட்டத்தை நடத்த சிஐடியு சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் விபரம் வருமாறு.
ஒரு தொழிலாளியின் ஊதியம் ஏப்பம்
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு 2009 ல் இருந்துசெயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 77 பம்ப் ரூம்கள் மூலமாக கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு பம்ப் ரூமிற்கு 3 ஷிப்டுக்கு 3 தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படவேண்டும். சட்டத்திற்கு விரோதமாக இம்மாவட்ட அதிகாரிகளும் ஒப்பந்தக் காரர்களும் இரண்டு பேரை நியமனம்செய்து 12 மணி நேரம் வேலை வாங்குவதோடு, ஒரு நபருக்கு உரிய ஊதியத்தை இருவரும் பங்கு போட்டு மோசடி செய்து வருகிறார்கள்.
231 தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டியஇடத்தில் 154 தொழிலாளர்களே பணி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரியம் நிர்ணயித்த சம்பளம் ஒரு ஆண்டு கூட வழங்கப்படவில்லை. குறிப்பாக 2018-2019 ஒப்பந்தப்படி ஒரு தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 13,350 வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்தக்காரர்கள் வழங்குவதோ சராசரியாக ரூபாய் 4940 தான் வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு சம்பளமாக வாரியத்தில் இருந்து ஒதுக்கப்படும் பணம் ரூபாய் 30,83,850 ஆகும். ஆனால் ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுப்பது வெறும்ரூ.7,60,760 மட்டுமே. ஒருமாதத்தில் மட்டும் ஊழியர்களுக்கு தரும் சம்பளத்தில் ரூ.23,23,090 மோசடி செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 2,78,77,080 ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பதினோரு ஆண்டுகளாக ரூபாய் 30,66,47,880 ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்காமல் குடிநீர்வடிகால் வாரிய அதிகரிகளும், ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இபிஎப், இஎஸ்ஐ செலுத்துவதில் மோசடி
சம்பளத்தில் மட்டும் மோசடி நடக்கவில்லை. இபிஎப் செலுத்துவதிலும், இஎஸ்ஐ செலுத்துவதிலும் மோசடி நடந்துள்ளது. பணி செய்யும்ஊழியர்களுக்கு செலுத்தாமல் ஒப்பந்தக்காரர்களின் உறவினர்களின் பெயரில் செலுத்தி இதிலும் பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது.இதுகுறித்து 2019 ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டு, இராமநாதபுரம் உதவி ஆட்சியர் விசாரணை செய்து தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பி வைத்தார்.கடந்த ஓராண்டாக தொழிலாளர் துணைஆணையாளர், குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணை செய்து இறுதியில் தொழிற்சங்கம் எழுப்பிய விசயம் உண்மை எனவும், ஒப்பந்தத்தில் கூறியபடி சம்பளம் வழங்கவேண்டும், சம்பளத்தை வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பரிந்துரை செய்தார்.இந்த பரிந்துரையை அமலாக்க வலியுறுத்திபலகட்ட பேச்சுவார்த்தை, ஆகஸ்ட் 19ல் போராட்டம் எல்லாம் நடத்திய பின்பும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒப்பந்தக் காரர்கள்தரும் கையூட்டுக்கு மயங்கி அமல்படுத்த மறுத்து வருகிறார்கள்.
குடியேறும் போராட்டம்
எனவே வரும் 14.09.2020 அன்று காலை 10 மணிக்கு...
1. தொழிலாளர் துணை ஆணையாளர் வழங்கிய பரிந்துரையை அமல்படுத்து.
2. ஒப்பந்தக்காரர்கள் தரும் கையூட்டுக்கு விசுவாசமாக செயல்படும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் மோசடி செய்த வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு.
3. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, மக்கள் வரிப்பணத்தை மோசடி செய்த ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மோசடிப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்!
4. வாரியம் நிர்ணயித்த சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்கு.
5. இபிஎப், இஎஸ்ஐ யை பணிபுரியும் தொழிலாளர்கள் பெயரில் செலுத்து என்ற கோரிக்கைகளை முன்வைத்து குடியேறும் போராட்டத்தை நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என சிஐடியு இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.