புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்படும் உயர்பதவிக்கான துறை தேர்வு , இணைய கோளாற்றால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த தேர்வாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ஆண்டுதோறும் துறைசார்ந்த நிர்வாக தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இதற்கான தேர்வு தமிழகம் முழுவதுமாக இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் எழுதினர் . ஆனால் , புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற இருந்த தேர்வு , இணையக் கோளாறு பிரச்சனையால் நடைபெறவில்லை. இதனால் 150 தேர்வாளர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் ஏமாற்றமடைந்த தேர்வாளர்கள் அந்த தேர்வு மையத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து, இந்த தேர்வு மையத்துக்குப் பதிலாகத் திருச்சியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேர்வை மறு தேதியில் நடத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததை அடுத்து தேர்வாளர்கள் களைந்து சென்றனர்.