புதுக்கோட்டை, மார்ச் 9- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இஸ்லாமியர்களைத் தாண்டி அனைத்துப் பகுதியினருக்குமான போராட்டமாக மாற்ற வேண்டும் என்றார் தமுஎகச கௌரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை ‘திடல்’ இலக்கியக்கூடல் நிகழ்ச்சியில் ‘குடியுரிமை திருத்தச் சட்டம்–தெளிவரங்கம’ என்ற தலைப்பில் அவர் பேசியது: உலகின் எந்த நாட்டிலும் மத அடிப்படையிலான குடியுரிமை கிடையாது. ஆனால், மதசார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில் மத ரீதியிலான குடியுரிமை என்ற புதிய கோட்பாட்டை குடியுரிமை திருத்தச் சட்டம் உருவாக்குகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. ஊடுருவல் காரர்களை தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள சட்டம் போதுமானது. உண்மையிலேயே பாதிக்கப்படப் போவது இந்துக்களையும் உள்ளடக்கிய அப்பாவி மக்களே! இவர்கள் அகதிகள்மீது பாசம் வைப்பதைப் போல பாசாங்கு செய்கின்றனர். அப்படியென்றால் கேட்கும் ஆவணங்கள் குறிப்பிட்ட தேதிக்கும் முன்பாக இருக்க வேண்டும் என ஏன் நிர்ணயம் செய்கின்றனர். இது இஸ்லாமியர்களுக்கான பிரச்சினை. இந்தச் சட்டத்தால் நமக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை என்ற மனநிலையை கட்டமைக்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியர்களே! இந்தியர்களுக்குள் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்பதுதான் உண்மை. ஆனால், இந்தியர்கள் என்பதையும், இஸ்லாமியர்கள் என்பதையும் வேறு, வேறாக சித்தரிக்கப்பார்க்கின்றனர். நாடுமுழுவதும் ஷாகீன் பாக் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், அவர்கள் தேசியக்கொடியைத்தான் ஏந்திப் பேராடுகின்றனர். இஸ்லாமியப் பெண்கள் எழுச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக ஐ.நா.மன்றம் சேர்ந்திருக்கிறது. ஏனென்றால், இந்த சட்டம் அடிப்படையில் மனித உரிமைக்கு எதிரானது. இந்தப் பூமியில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தேசத்தில் குடியுரிமை பெற உரிமை உள்ளது. அவர்கள் விரும்புகிற தேசத்தில் தனது குடியுரிமையை மாற்றிக்கொள்ளவும் உரிமை இருக்கிறது. எல்லா கட்சிகளையும் போல அல்ல பாஜக. இதர கட்சிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆட்சியை கைப்பற்றுவது இவர்களின் நோக்கம் அல்ல. ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் தனக்கு சாதகமாக மாற்றுவதே இவர்களின் திட்டம். இவர்கள் ஹிட்லரைவிட, முசோலினியைவிட ஆபத்தானவர்கள். இந்நிலையில், இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துகின்ற பகுதிகளுக்குச் சென்று ஆதரவு தெரிவிப்பது, அவர்களோடு அமர்ந்து போராடுவது மட்டும் போதாது. இது அனைத்துப் பகுதி மக்களுக்குமான பிரச்சனை என்பதாக மாற்ற வேண்டும். பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மத்தியில் நாம் வேலை செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த மக்களுக்கான போராட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு தமிழ்ச்செல்வன் தனது பேச்சில் குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார். தமுஎகச மாநில செயற்குழு உறுபபினர் நா.முத்துநிலவன் கருத்துரை வழங்கினார். மாவட்டப் பொருளாளர் சு.மாதவன் நன்றி கூறினார்.