புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமையன்று வீசிய சூறாவளிக் காற்றில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல லட்சரூபாய் மதிப்புள்ள வாழைமரங் கள் முறிந்து நாசமாகியது. உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை மரங்கள் குழைதள்ளிய நிலையில் அதற்குத் தேவையான அனைத்துசெலவுகளையும் விவசாயிகள் செய்து முடித்திருப்பார்கள். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும். விற்பனைக்குத் தயாராகிவிடும்.
இந்நிலையில், வெள்ளிக் கிழமை வீசிய கடுமையான சூறாவளிக் காற்றுடன் கறம்பக்குடி மற்றும் புதுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த சூறைக்காற்றை தாங்க முடியாமல் கறம்பக்குடி மற்றும் புதுக்கோட்டை வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த செம்பட்டிவிடுதி, களபம், ஆண்டிக்கோன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடும், பாதியிலும் முறிந்து நாசமாகிவிட்டன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விவசாயிகள் அதிக செலவு செய்து சாகுபடி செய்யும் சாகுபடிகளில் வாழையும் ஒன்று. வாழைத் தோப்பு ஒரு முறை அழிந்தால் அந்த விவசாயி இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு பல வருடங்கள் ஆகும். எனவே, தமிழகஅரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்துள் ளார்.