tamilnadu

img

பேரூராட்சிக்கும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்துக... அக்.6 விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை:
பேரூராட்சி பகுதிகளுக்கும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அக்டோபர் 6 அன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ்நாடு, ஒடிசா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பேரூராட்சி அமைப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களில் பல லட்சக்கணக்கில் விவசாயத் தொழிலாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேலையில் வாழ்வாதாரத்தை இழந்து கடும் துயரத்தில் உள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்திட வேலைவாய்ப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை.பேரூராட்சிப் பகுதிகளுக்கும் ஊரக வேலைத்திட்டத்தை துவங்க வலியுறுத்திஅகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பலகட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. 2017-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி சென்னை கோட்டையை நோக்கிபேரணி நடத்தி முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் வருமானத்தை இழந்து இவர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளிலும் சுமார் 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் நூறுநாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவது அவசியமாகும். தேவையான நிதி ஒதுக்கீடு செய்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடர்ச்சியாக போராடி வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு நகர்புற வளர்ச்சி செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறு நகர்புற பகுதிக்கும் வேலை வாய்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்தி ஊதியமாக ரூ.202 வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் கூலி ரூ.202 என்பது இன்றைய விலைவாசி உள்ளிட்ட நிலைமைகளை சமாளிக்கப் போதுமானதாக இருக்காது. எனவே, சிறு நகரங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாட்களை கூடுதலாக்குவதுடன் தினக்கூலியை ரூ.600-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். திட்டத்தை காலம்தாழ்த்தாது உடனடியாக துவக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்கிட வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடந்து ஊராட்சிகளில் செயல்படுத்திட வேண்டும். குடிமனைப்பட்டா வழங்க போடப்பட்டுள்ள அரசாணை 386-ன்படி பட்டா வழங்கும் ஏற்பாடுகளை உடனடியாக துவக்க வேண்டும். அரசாணை காலத்தை நீட்டிப்பு செய்திட வேண்டும். மாநில அரசு விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான குறைந்தபட்ச கூலி குறித்துகருத்துக்கேட்டு 10 மாதங்களைக் கடந்தும் இன்னும் அறிவிக்கை வெளியிடவில்லை. ஆகவே, உடனடியாக குறைந்தபட்ச கூலியாக ரூ.600 என அறிவித்திட வேண்டும். கொரோனா காலம் முடியும்வரை பொது விநியோகக் கடைகள் மூலம் இவலசமாக அனைத்து சமையல் பொருட்களையும் வழங்கிட வேண்டும். 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 அன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் நிர்வாகிகள் எம்.சின்னதுரை, அ.பழனிசாமி, கே.பக்கிரிசாமி, எஸ்.பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.