tamilnadu

img

முதல் மாத சம்பளத்தை எம்.சின்னத்துரை எம்எல்ஏ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்....

புதுக்கோட்டை:
தன்னுடைய ஒருமாத சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் வெள்ளிக்கிழமையன்று ரூ.1,05,000-க்கான வரைவோலையை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்மாத சம்பளம் முழுவதையும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

 சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்று இந்தக் குறுகிய நாட்களுக்குள் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கந்தர்வகோட்டை தொகுதியில் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கறம்பக்குடி துணை மின் நிலையத்தில் பழுதடைந்து இருந்த 10 எம்விஏ மின்மாற்றியானது அமைச்சர்களின் உதவியோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காவிரி - குண்டாறு - வைகை திட்டம் 
வெள்ளாளவிடுதி-ஆத்தங்கரை விடுதி இடையே ஆற்றில் ரூ.13 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் நீராதாரத்தை மேம்படுத்துவதற்கு காவிரி-குண்டாறு - வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்தை மாவட்டம் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் செயல்படுத்துவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் குறிப்பிட்ட அளவு காவிரி பாசனப்பகுதி வருகிறது. ஆனால் முதலமைச்சர் அறிவித்துள்ள குறுவை சாகுபடிக்கான தொகுப்பில் இந்தப் பகுதி விடுபட்டுள்ளது. எனவே, தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி பாசன விவசாயிகளும் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடிக்கான தொகுப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாக முயற்சிப்பேன்
ஒன்றிய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழக அரசின் ஒத்துழைப்போடு மேற்கொள்வேன் என்றார். சமீபத்தில் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழங்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு இணையாக எங்கள் கட்சியின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா என்ற நோய்த்தொற்றை விரட்டியடிப்போம் என்றார்.நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் கே.தங்கவேல், வி.ரெத்தினவேல், த.அன்பழன், டி.லட்சாதிபதி, வாலிபர் சங்க செயலாளர் துரை நாராயணன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.