புதுக்கோட்டை, மே 16-நடிகர் கமல் மீது பாய்பவர்கள் கோட்சே, காந்தியை கொல்லவில்லை என்பதையும், அவன் ஒரு இந்துஇல்லை என்பதையும் முதலில் நிரூபிக்கட்டும் என்றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்தியதுணைத் தலைவர் உ.வாசுகி. புதுக் கோட்டையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது:தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. மத்திய அரசு தமிழகத்தை வறட்சிபாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளுக்கு உதவ வேண்டும். மாநில அரசும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட வேண்டும். கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர்அணையை திறப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற் கொள்ள வேண்டும். தேசிய வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்துவதோடு கூலியையும் ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.ஆட்சேபகரமற்ற நிலங்களை 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு ஜூன் மாதத்தோடு முடிவடைவதால் அதற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்தபடி ஒரு லட்சம் வீடு கட்டிக் கொடுக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அரசின் நிவாரணம் பொருட்கள் கிடைக்காதவர் களுக்கும், தென்னை உள்ளிட்டபாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்காதவர்களுக்கும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கைசிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும். மன்னார்குடி அருகே கொல்லிமலை என்ற தலித் இளைஞரை சாதி ஆதிக்கவாதிகள் மனிதக் கழிவுகளை தின்னவைத்த குற்றவாளிகளை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததாலும், ஆக்சிஜன்பற்றாக்குறையாலும் 5 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. இது இயற்கையான இறப்பு தான் என மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழு நேரமும் தடையில்லாமல் மின்சாரம் அளிக்கும் தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்க மறுப்பது ஏன்?தேர்தல் ஆணையத்தின் செயல் பாடு திருப்திகரமாக இல்லாததால் தமிழக தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும். அல்லது மத்தியில் இருந்து சிறப்பு பார்வையாளரை நியமித்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச் சூழல் துறைஅனுமதி அளித்துள்ளது. தமிழகத்தைபாலைவனமாக்கும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற ஜூன் 5முதல் 10-ஆம் தேதிவரை விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடத்தவுள் ளது.தமிழகத்தில் உள்ள மத்திய அரசுநிறுவனப் பணிகளில் வடமாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பு முழுமையாகஉள்ளது. குஜராத், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட சதவிகித இடங்களை அந்தந்தமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற நடைமுறையைப் பின்பற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.‘கோட்சே ஒரு இந்து தீவிரவாதி’ என்று கூறியதற்காக கமல்ஹாசன் மீது எதிர்ப்பு தெரிவிப்பதைக் கைவிட்டு, அவர் இந்து இல்லை என்றும், காந்தியை கொன்ற பயங்கரவாதி இல்லை என்றும் பாஜகவினர் நிரூபிப்பதுதான் சரியானது. ஆனால், அவ்வாறு செய்யாமல் அவரை அவதூறாக பேசுவது, அநாகரிகமாக நடந்துகொள்வது கண்டனத்துக்கு உரியது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதைநிமித்தமான சந்திப்பு என்பது மட்டுமே தற்போதைய நிலை. மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது அரசியலும் பேசப்படலாம். அதுகுறித்து சந்தித்துக் கொண்டவர்கள் கூறுவது தான் உறுதியானதாக இருக்கும். இதுதொடர்பாக தேவையற்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு உ.வாசுகி கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்டதுணைச் செயலாளர் எம்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.