tamilnadu

img

கொரோனா பணியாற்ற தயங்கும் மருத்துவ ஊழியர்கள்

புதுதில்லி, ஜூன் 26- கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள தில்லியில், நிலைமையைச் சமாளிக்க, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தில்லியில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று  ஏற்பட்டுள்ளது. அதில், 27 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய உணவகங்கள், அரங்கு கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த  நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தில்லி ஹார்ட் அண்ட் லங் இன்ஸ்டிடியூட் (டி.எச்.எல்.ஐ) மருத்துவ மனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுவதற்கு முன்பே  15 சதவீத செவிலியர்கள் விலகியிருந்தனர். பெற்றோரின் அழுத்தம் மற்றும் தனிப்பட்ட அச்சங்கள் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மேலும் 15 சதவீத செவிலியர்கள், கொரோனா மையமாக மாற்றப்பட்ட பின் பணியிலிருந்து விலகியுள்ளனர். இதேபோல், ரோஹிணியில் உள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 40 சதவீதம் முதல் ஏராளமான செவிலியர்கள் போக்குவரத்து பற்றாக்குறை,  குடும்பத்தி னர் கொரோனா பணிசெய்ய அனுமதிக்க மறுத்தது போன்ற காரணங் களை சுட்டிக்காட்டி வேலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டுள்ளனர். உள் மருத்துவம், சுவாச மருத்துவ நிபுணர்கள்  தேவை. ஆனால்  அவர்கள் கிடைக்கவில்லை என்று டி.எச்.எல்.ஐ.யின் தலைவர் டாக்டர் கே.கே.சேத்தி கூறினார். அவசரகால பிரிவுகளில் பணியாற்றும் மருத்து வர்களும் வேலை செய்ய மறுக்கிறார்கள். கொரோனா மையங்களில் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால் மருத்துவர்கள் பணிக்கு வரவிரும்பவில்லை. வேலை செய்யத் தயாராக இருக்கும் மருத்து வர்களும் வழக்கமாகப் பெறுவதைவிட கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக சம்பளம் கேட்கிறார்கள் என்று அவர் கூறினார்.