tamilnadu

img

ஓய்வறியா போராளி தோழர் சந்திரா: தலைவர்கள் அஞ்சலி...

புதுச்சேரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தின் பிரதேசக்குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான வே.சந்திரா வியாழக்கிழமை(ஆக.12) காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியில் தனது கணவர்  வேலாயுதத்துடன் வசித்து வந்த சந்திரா, புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியை துவங்கினார். இறுதியாக     முருங்கப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார்.பணியின்போது மாணவர்கள், மற்றும் அதிகாரிகளால் மதிப்புமிக்க ஆசிரியராக  விளங்கினார்.ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.ஆசிரியர் பணிஓய்வுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் முழு நேர ஊழியராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்   புதுச்சேரி பிரதேச தலை
வராக செயல்பட்டு வந்தார். புதுச்சேரி பிரதேசத்தில் மாதர் சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு கூட்டத்தில் பங்கேற்று  திரும்பியிருந்த நிலையில் உடல்நலக் குறைவால் வே.சந்திரா காலமானார்.

சிபிஎம் இரங்கல்
கட்சியில் முக்கிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டு வந்த தோழர் வே.சந்திராவின்  மறைவு அவரது குடும்பத்தாருக்கும், கட்சிக்கும், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் பேரிழப்பாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அஞ்சலி
முருங்கபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த  சந்திராவின்  உடலுக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன்,தமிழ் மாநிலத்தலைவர் எஸ். வாலண்டினா, பிரதேச செயலாளர் சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், வி. பெருமாள் பிரதேச செயலாளர் இரா. ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனிவாசன் பிரபுராஜ், ராமசாமி, நகர குழு செயலாளர் மதிவாணன் உட்பட பிரதேச குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.