புதுச்சேரி:
புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை சூறையாடினர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சி அமைப்பதில் இருகட்சிகளுக்கும் இடையே ஆரம் பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்தது.முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொல்லைப்புறமாக ஆட்சி அரியணையில் அமர்ந்திட பாஜக சதி திட்டம் தீட்டியது.இதற்காக, பாஜக கட்சியைச் சார்ந்த மூன்றுபேரை அவசர அவசரமாக நியமன எம்எல்ஏக்கள் அறிவித்துக் கொண்டது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்ற எம்எல்ஏ களையும் குதிரை பேரத்தின் மூலம்விலைக்கு வாங்கியது. மேலும் கூடுதலாக அமைச்சர்கள் வேண்டும் என்றும் முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்றும் பாஜக கலகம் செய்தது.இது, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலை கிளப்பியது என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களும் எம்எல்ஏக்களும் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி அமைதி காத்தார்.
பிறகு பாஜக ஒன்றிய தலைமைதில்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சியைஏற்படுத்தியது.இந்த பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு பேரவைத் தலைவர் பதவி, 2 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பேரவைத் தலைவராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவில்லை. இதனிடையே பாஜகவில் முன்னாள் அமைச் சர் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இவர்கள்இருவரும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர்கள்.
இந்நிலையில் ஜான்குமாருக்கு பதிலாக மாற்று நபருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகத் தகவல்கசிந்தது. இதனை அறிந்த காமராஜ் நகர் தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சனியன்று (ஜூன் 19) புதுச்சேரி சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பாஜகதலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.அப்போது,ஜான்குமார் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர்.மேலும், அலுவலகம் முன்பிருந்த பெயர்ப் பலகையைக் கிழித்துதங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதையடுத்து அங்கு வந்தகட்சி நிர்வாகிகள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிபோர்க்களம் போல் காட்சியளித்தது.இதேபோல் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நெல்லித்தொப்பு சிக்னலில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார் காமராஜ் நகர்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்று அவரது மகன் ரிச்சர்ட்ஸ் நெல்லிதோப்பு தொகுதியில் பாஜகவில் நின்று வென்றார். இருவரில் ஒருவருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர் பார்த்தனர். கட்சி தாவியும் அமைச்சராக முடியாத ஆத்திரத்தில் பாஜகஅலுவலகத்தை சூறையாடி இருப்பது பாஜகவினருக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.