பெரம்பலூர், ஏப்.23- பெரம்பலூர் அருகே பெண் களை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர்களின் வீடுகள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அருகே வேலூர்ஊராட்சி கீழக்கணவாய் கிராமத்தில் இரு பிரிவினரிடையே கடந்த சிலஆண்டுகளாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்.19-ஆம் தேதி அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துச் சென்ற ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்களை, மற்றொரு தரப்பைச் சேர்ந்தஇளைஞர்கள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டு கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட ஒரு தரப்பைச் சேர்ந்தவரை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் வீடு புகுந்துதாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பெரம்பலூர் காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திங்கள் கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.