பெரம்பலூர், செப்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பொருளாதார மண்டல நில மீட்பு போராட்டத்திற்கான சிறப்பு பேரவை, பெரம்பலூர் துறைமங்கலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, பி.ரமேஷ், எ.கலையரசி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு எம்.சின்னதுரை நில மீட்பு போராட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். பேரவையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருமாந்துறை, எறையூர் சர்க்கரை ஆலை பெருமத்தூர், மிளகாநத்தம், பெண்ணகோனம், லெப்பைகுடிகாடு, அயன்பேரையூர், கீரனூர் உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி ஆந்திராவை சேர்ந்த ஜிவிகே குழுமமும் இந்திய பெரு வணிகத்துறை(டிட்கோ) சேர்ந்து 2007-ஆம் ஆண்டு கையகப்படுத்தினர். விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி நிலம் தர மறுத்த போது நிலத்திற்குண்டான கிரயத் தொகையுடன் வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும், இலவச வீட்டுமனையும் தருவதாக ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்து கொடுத்தனர். இத்திட்டத்தினை 5 ஆண்டிற்குள் 827 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்திருந்தனர். மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் பொருளாதார மண்டல திட்டம் அமைக்கப்பட்டால் சிங்கப்பூர் போல தொழில் வளர்ந்த மாவட்டமாக மாறும் என உறுதி கூறினர். நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகளாகியும் இதுவரை சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இது குறித்து 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக வந்த அம்மாவின் அரசு என தெரிவித்து ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு இத்திட்டம் குறித்து கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். 3 ஆயிரம் ஏக்கர் நல்ல விளை நிலங்களும் கருவேலி முள் முளைத்து தரிசாக கிடக்கிறது. எனவே தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ன்படி எந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அத்திட்டம் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற சட்ட விதிகளின்படி ஜிவிகே குழுமம் செயல்படவில்லை. ஆகவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இதர விவசாய சங்கங்களும் இணைந்து வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நில மீட்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் சிபிஎம் ஆர்.முருகேசன், பி.கிருஷ்ணசாமி, எம்.செல்லதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.