தஞ்சாவூர், மே 12- கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 தஞ்சையில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தஞ்சாவூர் மாவட்டச் செயற்குழு கூட்டம், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி, தஞ்சை கணபதி நகர் கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் பேசினார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய உழைப்பாளர் குடும்பங்களின் இன்னல்களை அகற்றிட வேண்டும். 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்றும், தொழிலாளர் விரோத, நடவடிக்கை யை உடனே திரும்பப் பெற்றிடுக.
வேலை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 7,500 நிவாரணம் வழங்கிடுக. நூறு நாள் வேலைத் திட்டத்தை அனைத்தும் ஊராட்சிக ளுக்கும் முழுமையாக அமல்படுத்துக. டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சிக்காதே, மக்களின் வாழ்வை சீரழிக்காதே. விவசா யத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை கைவிடுக. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகளை செய்திடுக” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் மே 20 எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார். கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், வெ.ஜீவக்குமார், கே.பக்கிரிசாமி, சி.ஜெயபால், எம். மாலதி, பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்செல்வி, கே.அருளரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.