பாட்னா:
பீகாரில் பாஜக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று, போலீஸ்காரர் ஒருவரை, மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பக்ஸர் பகுதியில் பாஜக சார்பில் ‘ஜனதா தர்பார்’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபேவும் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாஜக தொண்டர்கள் மீது, போலீஸ்காரர் ஒருவர் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சரிடம் சிலர் தெரிவித்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே, சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை அழைத்து, “பாஜக தொண்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் உன்னை வேலையை விட்டு தூக்கிவிடுவேன்’ என்று கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக திட்டித் தீர்த்துள்ளார். வீடியோவில் பதிவான இந்தச் சம்பவம், சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.