பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமிய மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் அது சங்பரிவார் கொடுத்த தீர்ப்புதான். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வெறுப்பு அரசியலை கக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கிறார்கள். அதிகாரம் கையில் இருப்பதால் அகந்தையோடு செயல்படுகிறார்கள்.
அடைக்கலம் தேடி வந்தோருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் மனிதாபிமான நடைமுறை. அதற்கு மாறாக, மதவாதத்தின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தனது இறுதி மூச்சுவரை இந்துத்துவாவை எதிர்த்த அம்பேத்கரைப் புகழ்ந்து கொண்டே, அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை சீர்குலைக்கிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அசாமில் சுமார் 12 லட்சம் இந்துக்கள் குடியேறி இருக்கிறார்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மூலம் வரையறுத்துள்ளனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் எப்படி அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியும்? மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனைகளை உள்வாங்கிய ஜனநாயக சக்திகள் தேசிய அளவில் ஓரணியில் திரள வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒன்றுபடாவிட்டால் சனாதனக் கும்பலிடமிருந்து நாட்டைக் காக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, ஜனநாயகத்தை காக்க ஓரணியில் திரள்வோம்.