election2021

img

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக விட மாட்டோம்... ஆர்எஸ்எஸ் - பாஜகவின் சகிப்புத்தன்மையற்ற அரசியலை கேரளத்தில் முறியடிப்போம்... ராஜ்நாத் சிங்கிற்கு பினராயி விஜயன் பதிலடி....

 கோழிக்கோடு:
கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் கேரளத்தில் முகாமிட்டுள்ளது. வகுப்புவாத வெறியை கிளப்பி வாக்குகளை பெறுவதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

அதனொரு பகுதியாக, கோழிக்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். 
“மத்திய பாஜக அரசானது, ஜம்மு - காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி முத்தலாக் முறையை தடை செய்தது. விவசாயத்தைப் பாதுகாக்க மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இதேபோல கேரளத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும்” என்று அவர் கூறினார். 

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “உ.பி. மாநிலம் ஜான்சியில் கன்னியாஸ்திரிகள் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் மதமாற்றம் செய்ய இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்துப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகாரில் உண்மையில்லை எனத் தெரிந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். மாறாக, தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறுவது பொய்” என்று பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர்களின் இந்த பிரச்சாரத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது அப்பட்டமான பொய். இப்படிப் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும் என்று காசர்கோடு கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் விளாசித் தள்ளி இருக்கிறார்.
‘’கன்னியாஸ்திரிகள் யாரும் தாக்கப்படவில்லை, அவர்களின் பயண ஆவணங்கள் மட்டும் பரிசோதிக்கப்பட்டன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். உண்மையில் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், ஏபிவிபி அமைப்பினர் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு). ஒருவருக்கு இந்த தேசம் முழுவதும் செல்ல உரிமை இருக்கிறது. ஆனால், கன்னியாஸ்திரிகள் என்ற காரணத்துக்காக அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் செயலுக்காக உண்மையில் வெட்கப்பட வேண்டும். மாறாக, மத்திய அமைச்சர் நியாயப்படுத்திப் பேசுகிறார்” என்று பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார். 

சிஏஏ-வை அமல்படுத்துவோம் என்ற ராஜ்நாத் சிங்கையும் அவர் விட்டுவைக்கவில்லை.கோழிக்கோடு மாவட்டத்தின் புரமேரி பகுதியில் தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் பினராயி விஜயன், “மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் பேச்சு சிறுபான்மையினருக்கு விடப்பட்ட சவால். சிஏஏ அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரே சொல்கிறார். ஆனால், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். கேரளத்தில் சிஏஏ செயல்படுத்தப்படாது. சகிப்புத்தன்மை அற்ற போக்கு கேரளத்தில் வளர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியான பதிலடி கொடுத்துள்ளார்.

“நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருவோரிடம், உங்களுக்கு இங்கு வசிக்க உரிமை இல்லை என கூறப்படுகிறது. சிஏஏ கொண்டுவரப்பட்ட போது அதனை கேரள இடதுசாரி அரசு வெளிப்படையாக எதிர்த்தது. கேரளத்தில் அச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறியது. நாட்டில் வகுப்புவாத பிளவுகளை உருவாக்க அல்லது மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடந்தபோதெல்லாம் கேரள இடதுசாரி அரசு அதற்கு எதிராக நின்றது. இனியும் அப்படியே நிற்கும். மதவெறியர்களை முறியடிக்கும்” என்றும் கூறியுள்ளார்.