திருவனந்தபுரம், செப். 10 - செழிப்பு மற்றும் சிந்தனை யின் விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் என கேரள முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதனன்று (செப்.11) உலகெங்கும் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகை யை விமரிசையாக கொண்டாட உள்ளனர். அதையொட்டி மக்களுக்கு கேரள முதல்வர் ஓணம் திருநாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து விதமான வேறுபாடுகளையும் கடந்து மனித மனங்களின் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்க வேண்டிய காலகட்டமிது. அனைவரும் சமமாக இருந்த, எவருக்கும் பாகுபாடு காட்டாத ஒரு நல்லகாலம் முன்பு இருந்தது என்பதே ஓணம் பண்டிகை குறித்த நமது நம்பிக்கை. நன்மை, சமத்துவம், செழிப்புக்கான அடிப்படைகளை உயர்த்திப்பிடிக்கும் காலத்தின் வருகைக்காக நடத்தும் போராட்டங்களுக்கு இந்த நம்பிக்கை ஊக்கமளிப்பதாகும்.
முன்பு எங்கோ ஒரு சமத்துவமான அழகான உலகம் இருந்தது என்கிற சிந்தனை மீண்டும் அத்தகையதொரு காலத்தையும் உலகத்தையும் உருவாக்குவதற்கான உத்வேகம் அளிக்கிறது அல்லவா. கர்க்கடகம் (ஆடி) பஞ்சத்தின் மாதம் என கருதப்படுகிறது. அந்த ஆடியை நாம் எதிர்கொள்வது தொடர்ந்து வரும் சிங்ஙம் (ஆவணி) உண்டு என்கிற எதிர்பார்ப்பால்தான். அத்தகைய ஒரு எதிர்பார்ப்பும் ஓணம் குறித்த கருத்தாக்கத்தின் பகுதியாகும். தொடர்ந்து வந்த இரண்டு இயற்கை இடர்பாடுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த இழப்புகளால் துவண்டு போவதல்ல எதிர்கொள்வதே தேவையானது. ஓணத்தின் நற்செய்தி உயிர்வாழ்தலுக்கும் நவகேரள நிர்மாணத்திற்கும் தேவையான ஊக்கத்தை அளிப்பதுமாகும். உலகமெங்கும் உள்ள மலையாளிகளுக்கு ஓணம் வாழ்த்துகள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.