விக்கிரவாண்டி, ஜூன் 30- புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதி மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி படத்திறப்பு நிகழ்ச்சி விழுப்புரம் கழிஞ்சி குப்பத்தில் ஞாயிறன்று (ஜூன் 30) நடைபெற்றது. ராதாமணியின் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். யாருமே எதிர்பார்க்காத வகையில் அகில இந்திய அளவில் பிரதமர் மோடி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. நமக்குத்தான் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. உங்களால்தான் அந்த வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களால்தான் அந்த வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக, நாம் செய்த பிரசாரங்களை புரிந்துகொண்டு வாக்களித்ததால்தான் இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம். என்னதான் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கிற எல்லோருக்கும் ஒரு குறை இருக்கிறது. அது என்ன வென்றால் இன்னும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறதே? அந்த ஆட்சிக்கு எப்போது முடிவு கட்டப் போகிறீர்கள் என்ற குறை இருந்து கொண்டு இருக்கிறது.கவலைப்படாதீர்கள். உங்கள் உணர்வு புரிகிறது. சட்டப்பேரவைத்தலைவர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவை கூடிய தினத்தன்று அறிவித்தோம். பேரவைத்தலைவர் மீது நாம் எதற்காக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொடுத்தோம் என்றால், 3 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க திட்டமிட்டார்கள்; அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் கொடுத்தோம். பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்ற பிரச்சனையை கொண்டு வந்தால் முதலில் அதைத்தான் தீர்த்து வைக்க வேண்டும். 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லாமல் போகும். அதற்காகத்தான் நாங்கள் அறிவிப்பு வெளியிட்டோம். நாங்கள் இதை வெளியிட்ட நேரத்திலேயே உச்ச நீதிமன்றமும் அதை புரிந்து கொண்டு, பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்துள்ளதால் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை எக்காரணத்தை கொண்டும் பறிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஊடகங்களில் என்ன வருகிறது என்றால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து விட்டு தி.மு.க. பதுங்குகிறது என் கிறார்கள். புலி எப்போதும் பாய்வதற்குத்தான் பதுங்கும். ஓடி ஒளிவதற்கு பதுங்காது. பாய வேண்டிய நேரத்தில் பாய்வோம். முடிவு கட்ட வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.