பெரம்பலூர், ஆக.1- பெரம்பலூர் அருகே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு வியாழக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் தீரன் நகரைச் சேர்ந்தவர் செல்வராசு மகள் கீர்த்தனா (19). இவர், சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் ப்ளஸ் 2 படித்து 1,053 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து சென்னையில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவி 384 மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன்பின் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவிக்கு அழைப்பு வரவில்லை எனத் தெரிகிறது. ஆனால், அவருடன் படித்த தோழி ஒருவர் பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், நீட் தேர்வில் 484 மதிப்பெண் பெற்றிருந்தாராம்.
இதனால் புதன்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட கலந்தாய்வில் அவரது தோழிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி கீர்த்தனா, அவரது பெற்றோரிடம் புலம்பி வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மாணவியின் தாய் சுசீலாவை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதற்காக செல்வராசு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்த போது மாணவி கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.