tamilnadu

img

‘எங்கள் மதங்களை கண்டுபிடி’

மாணவர் சங்கம்  நூதன போராட்டம்

கோவை, டிச. 21 –  எங்கள் மதம் எதுவென்று கண்டுபிடி என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து கோவையில் அனைத்து மத அடையாளங்களோடு இந்திய மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறு பாடுகளை கடந்து வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்திய அடையாளத்தை பாதுகாக்க இப்போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்மையில் தேர்தல் கூட்டத் தில் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை சட்டத் திற்கு எதிராக போராடுபவர்கள் யார் என அவர்களது உடைகளை கொண்டே தெரிந்து கொள்ள முடியும் என மதரீதியான விஷமக் கருத்தை தெரிவித்திருந்தார்.  மதச்சார்பற்ற நாட்டின் பிரதமரே, மதத் துவேசத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசி யதை கண்டித்து மாணவர்கள் பல்வேறு வகை யில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அனைத்து மத அடையாளங்களையும் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, உடைகளையும், உருவங்களை யும் வைத்து மதத்தை கண்டுபிடிக்கும் வல்லமை உள்ள பிரதமரே, எங்களின் மதங்களை கண்டு பிடி, மக்களை பிரிக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு, என ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அசார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் காவ்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.