சென்னை, ஏப்.16- வரும் மே மாதம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்க ளுக்கும், கொரோனா நிவாரண உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேஷன் அட்டை தகுதிப்படி ஏப்ரலுக்கான அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்றும் கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படுகிறது என்றும், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி ரேஷன் அட்டைதாரர்க ளுக்கு எப்போதும் வழங்கப்படும், அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே மாதத்துக் கான அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்குவது தொடர்பாக கூடுதல் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஏப்ரலுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப்பொருட்களை 15 ஆம் தேதிக்குள் ஒதுக்கீட்டு அளவில் 100 சதவீதம் நகர்வு செய்து முடிக்க வேண்டும். 16 ஆம்தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு மே மாதத்திற்குரிய முன்நகர்வை உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களின் அனுமதியுடன் முன்னதாகவே தொடங்கி 30 ஆம் தேதிக்குள் 100 சதவீதம் முன்நகர்வை முடிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டப்பொருள்கள் ஆகியவை அந்தந்த கடையின் ஒதுக்கீடு அளவிற்கு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.