tamilnadu

img

எம்பாடு தீரலையே...!

முனீம்மாக் கிழவி முன்னூறு ரூபாய்க்கு கொய்யா பழங்கள் வாங்கி இருந்தாள். இரண்டு கூடைகளில் அடுக்கி, ஒரு கூடையை பழைய துணி கொண்டு மூடியிருந்தாள். அவளைப் போல கொய்யா பழம் விற்கும் பெண்கள் ரோட்டோரம் வரிசை கட்டி உட்கார்ந்து இருந்தனர்.ஞாயிற்றுகிழமையாதலால் கோவிலில் கூட்டம் நெம்பித் தள்ளியது. கூட்டதைப் பார்த்து விட்டு முனீம்மா போட்ட கணக்கில் அவளுக்கு ஐநூறு ரூபாய் வருமானம் வர காத்து இருந்தது. கொய்யா பழ வியாபாரிக்கு முன்னூறு ரூபாய் கொடுத்து கணக்கு தீர்த்தால் இருநூறு ரூபாய் கைக்கு வரும். அவள் கண்ணில் மூன்று பிள்ளைகளுடன் வாழாவெட்டியாய் வந்திருக்கும் மகள் ராஜி நிழலாடினாள். "இவ்வளவு வயசாகியும் எம்பாடு தீரலையே.." என மனதிற்குள் மருகினாள்.கொட்டு மேளத்துடன் காவடி கூட்டம் கடந்து போனது. காவடிக் சிந்துவுக்கு, ஆணும் பெண்ணும் கோலெடுத்து ஆடி கொண்டே போனார்கள். அரோகரா சத்தம் விண்ணை பிளந்தது. "ஆண்டவா.. இன்னக்கி எம்பொழப்ப நல்லபடியா காப்பாத்திக் கொடு" என முனீம்மா வேண்டிக் கொண்டாள்.கூட்டத்திலிருந்து விலகி வந்த பெண் மஞ்சள் குங்குமத்துடன் மங்களகரமாக வந்தாள். இரண்டு சிறுவர்கள் அவளைத் தொற்றிக் கொண்டு வந்தனர். முதல் போனியை அவள் ஆரம்பித்து வைத்தாள் நன்றாக இருக்கும் என முனீம்மா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் கூடையிலிருந்து பழங்களைப் பொறுக்க ஆரம்பித்தாள். முனீம்மா கேட்ட காசை அட்டியின்றி கொடுத்தவளை, "மகராசியா இரு" என வாழ்த்தினாள். இன்னக்கி ராசி நல்லா இருக்கு, நல்ல வேவாரம் நடக்கும் என வாய்விட்டுச் சொன்ன முனீம்மாவின் முகத்தில் தெளிச்சி ஏற்பட்டது.காலை 11 மணி இருக்கும். ரோட்டில் நிறைய போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். சைரன் சத்தத்துடன் வந்த காவல் ஜீப்புக்கு பின்புறம் வந்த கப்பல் போன்ற காரிலிருந்து குடும்பத்துடன் அமைச்சர் இறங்கினார். உடன் வந்த அதிகாரி கொய்யாப்பழம் விற்கும் பெண்களை அசூசையாக பார்த்தார். அடுத்த கணம், போலீசார் கொய்யாப்பழம் விற்கும் பெண்களை அவசரகதியில் அப்புறப்படுத்தினர்.முனீம்மா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. "ஏய் கிழவி கூடைய எடுத்துகிட்டு ஓடு" என்று உத்தரவிட்ட போலீஸை பார்த்து "எதுக்கு" என முனீம்மா கேட்டாள் . "கேள்வியா கேக்குற" என்று போலீஸ்காரர் கூடையை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். கொய்யாப்பழங்கள் ரோட்டில் உருண்டு ஊர்வலம் போயின. முனீம்மா தாங்க முடியாத ஆத்திரத்தில் "அட கொள்ளையில நாசமாப் போனவனே, எம் பொழப்புல மண்ணள்ளி போடுறியே. நீ நல்லா இருப்பியா" என கத்தினாள். போலீஸ் முனீம்மாவின் குடுமியை பிடித்து வளைத்து முதுகில் சாத்தினான். வலி தாங்க முடியாமல் முனீம்மா கதறிக் கொண்டிருந்த பொழுது, அமைச்சர் சாமி கும்பிட கோவிலுக்குள் போய்க் கொண்டிருந்தார்.