ஒரு நிமிடக் கதை
வெளியே கடும் வெய்யில்.பேருந்து அங்குலக் கணக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. உட்கார்ந்து இருக்கும் அன்புக்கு இறங்கி ஓடலாமா என்றிருந்தது. இடித்துக் கொண்டு நிற்பவர்கள் நிலை கவலைக்கிடமாக இருந்தது. குல்லா தரித்திருந்த முதியவர் முகத்தில் உட்கார இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் வியர்வையாய் வழிந்தது. கண்டக்டரின் கீழ் உதடு எச்சில் தொட்டு தொட்டு முன்னாடி துருத்திக் கொண்டிருந்தது. நல்லவேளை அவரிடம் டிக்கெட் மெஷினை கொடுத்து விட்டார்கள். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது “எதனாலங்க டிராபிக் ஜாம்’’ என அன்பு கேட்டான். “ஆத்துப்பாலத்துல இருந்து உக்கடம் வரை ஆர்ப்பாட்டம் பண்றாங்க எல்லா பஸ்ஸையும் இந்த ரூட்டுல திருப்பி விட்டுட்டாங்க” என எரிச்சலுடன் பதில் சொன்ன கண்டக்டரின் கீழ் உதடு கட்டுக்குள் நிற்காமல் நடனமாடியது.
அன்புக்கு முன்புறம் அமர்ந்திருந்த கண்ணாடிக்காரர் “இவனுகளுக்கு இதே எழவாப் போச்சு சட்டம் போட்டாத்தான இந்த நாட்டுக்காரன் யாரு வெளிநாட்டுக்காரன் யாருன்னு தெரியும்” என சத்தமாக சொன்னதை பேருந்தில் இருந்தவர்கள் மறுபேச்சில்லாமல் கேட்டுக் கொண்டனர். முதியவர் வியர்வையை துடைத்துக் கொண்ட போது அவர் முகத்தில் வெளிப்பட்ட வேதனை அன்புவின் மனதை உறுத்தியது. அன்புவின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டவர் போல முதியவர் அன்புவைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். பிறகு “நான் இந்த மண்ணுல பிறந்து எழுபது வருசமாச்சு எங்க வாப்பா அவரோட வாப்பா எல்லாம் இந்த மண்ணு தான். இப்பபோயி ஆதாரம் கேட்டா நான் எங்க போவேன்” என இவன் மட்டும் கேட்கும் அளவுக்கு முதியவர் பேசியது அன்புவின் மனதை நெகிழச் செய்தது. இருக்கையில் இருந்து எழுந்த அன்பு “பெரியவரே முதல்ல சீட்டில உட்காருங்க சட்டம் சரியா இருந்தாத்தான் ஜனங்க ஏத்துக்குவாங்க இல்லைன்னா எதுத்து நிப்பாங்க” என கண்ணாடிக்காரரைப் போலவே சத்தமாக சொன்னான். முதியவர் நம்பிக்கையுடன் அவனைப் பார்த்தவாறே பத்திரமாக அமர்ந்து கொண்டார். பேருந்தில் இருந்தவர்கள் இதையும் மறுபேச்சில்லாமல் கேட்டுக் கொண்டனர்.