புதுக்கோட்டையில் வரவேற்புக் குழு அமைப்பு
புதுக்கோட்டை, ஆக. 8- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில சிறப்பு மாநாடு வருகின்ற செப்டம்பர் 14-அன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வரவேற்புக்குழுத் தலைவராக என்.கண்ணம்மாள், துணைத் தலைவர்களாக சந்திரா ரவீந்திரன், பி.சுசீலா, சி.மாரிக்கண்ணு, செயலாளராக டி.சலோமி, துணைச் செயலாளர்களாக மு.கீதா, எஸ்.பாண்டிச்செல்வி, தெ.காயத்ரி, பொருளாளராக அ.மணவாளன் உள்ளிட்ட 101 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த மாநில சிறப்பு மாநாடு, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் நுண்நிதி நிறுவனங்களில் கடன்பெற்ற பெண்களின் மீதான துன்புறுத்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஆய்வுகளை நடத்தி விவாதித்திடும் மாநாடாக இருக்கும் என மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தெரிவித்தார். முன்னதாக மாவட்டச் செயலாளர் டி.சலோமி வரவேற்க, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.