tamilnadu

img

ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை, மார்ச் 19- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் வியாழனன்று (மார்ச் 19) ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஸ்டான்லி மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட தனிமைப்படுத்தப் பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத் துவர்கள், செவிலியர்கள் என சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் முழு ஈடு பாட்டுடன் இரவு பகலாக பணியாற்றி வரு கின்றனர். பதற்றம் மற்றும் சந்தேகத்தில் வரும் நபர்களுக்கு உதவி மையங்கள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள் ளன. அரசு மருத்துவமனைகளை அணுகுப வர்களுக்கு தேவைப்பட்டால் மாதிரி எடுக்கப்படும்.

அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி அவர்களது சந்தேகங்க ளை தெளிவுபடுத்தியுள்ளோம். தனியார்  மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தப் பட்ட வார்டுகளை அமைக்க முன்வந்துள்ளன. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வுக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெர்மல் ஸ்கேனர் விலையை உயர்த்தி விற்ற தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளபடி பொது மக்கள் அனைவரும் பயணங்களை தவிர்க்க  வேண்டும் என்பதையே மீண்டும் சுகாதா ரத்துறை வலியுறுத்துகிறது. அனைத்து விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் பரிசோதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக டுவிட்டர் மூலமாகவும் நேரடியாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. தில்லியில் இருந்து ரயில் மூலம் வந்த 20 வயது இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம். மேலும் யார் யார் தொடர்பில் இருந்தனர் என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அனு மதிக்கப்பட்ட நபர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார். அவருக்கு தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை. தேவையற்ற வதந்தி களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பு வோர் மீது கட்டாயம் தகுந்த சட்ட நட வடிக்கைகள் எடுக்கப்படும். வியாழக்கிழமை (மார்ச் 19) முதல் உள்நாட்டு விமான நிலை யத்திலும் தீவிர பரிசோதனை நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் சூழலுக்கு ஏற்றார்போல் தேவையான நடவடிக்கைகளை சுகாதா ரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

மாவட்ட மருத்துவமனைகளை தாண்டி இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் கூட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், கொரோனா விழிப்புணர்வுக்காக குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளோம். மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே சானிடைசர்கள் பயன்படுத்துவது அவசியம்; மீதமுள்ளவர்கள் சாதாரண சோப் பயன் படுத்தி கைகழுவினால் போதுமானது என்பதை வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ள னர். வடமாநில நபர்கள் அதிகம் வந்து தங்கி யுள்ள பகுதிகளை தொடர்ந்து சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது. 31ஆம் தேதிக் குள் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் விடுமுறை நாட்களை நீட்டிப்பது என்பது குறித்து காலம்தான் முடிவு செய்யும்.  காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். எனவே செய்தியாளர்கள் அவர் எங்கு இருக்கிறார் என்று தேடுவதை தவிர்க்க வேண்டும். இது அவரின் உடல் நலத்தையும், உங்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டுதான் கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.