எண்ணூர், ஆக. 14- இயற்கை பேரிடர் முதல் சாதாரண நிலையிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். எஸ். சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 17,18,19-ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான வி.பி.சிந்தன் நினைவு ஜோதியை புதனன்று (ஆக.14 ) வடசென்னை அனல் மின் நிலையம் அலகு-2 முன்பிருந்து தொடங்கிவைத்துப்பேசிய அவர் ஒப்பந்த தொழிலாளர்களை நம்பித் தான் மின்வாரியமே செயல்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லையென்றால் மின்வாரியம் இயங்காது.அந்த அளவிற்கு அனைத்து நிலையிலும் பணியாற்றுகின்றனர். அப்படிப்பட்டதொழிலாளர்களை அங்கீகரிக்கவேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், 2019 டிசம்பரில் ஊதிய உயர்வு குறித்து பேச வேண்டும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2018ஐ அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஜோதிபயணம்
நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கே.வெங்கட்டையா தலைமை தாங்கினார். செயலாளர் கே.வெங்கடேசன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து 50ஆம் ஆண்டு பொன்விழா கல்வெட்டை சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் திறந்து வைத்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி, சென்னை வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், மின்னரங்க கலைக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் வி.உமாநந்தன், மாநில இணைச் செயலாளர் தயாளன்,மத்திய சென்னை கிளைச் செயலாளர் வி.சீனிவாசன், வடசென்னை அனல் மின் நிலைய அலகு-1 நிர்வாகிகள் ஜெயவேல், சுந்தரம், சலில்குமார், உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.அகமதுசரிப் நன்றி கூறினார்.
வரவேற்பு
வி.பி.சிந்தன் நினைவு ஜோதிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலக வாயிலில் மைய கிளைத் தலைவர் சீனிவாசன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், கே.அருள்செல்வன், ஜெய்சங்கர், மையக் கிளை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.