கோவை, ஏப்.25- அரசு மருத்துவமனையில் முக்கியமான மற்றும் தவிர்க்கமுடியாத அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கல்லூரிகள் இயங்கவில்லை. தன்னார்வலர்கள் வெளிவர இயலாத நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர் கோவையில் ஆட்சியரின் சிறப்பு அனுமதி பெற்று ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்தனர். கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வாலிபர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். முடிவில் , 70 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது.
முன்னதாக, இம்முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி துவக்கி வைத்தார். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சந்திரசேகர், ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் மற்றும் துரைசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.