tamilnadu

img

இந்நாள் ஜுலை 20 இதற்கு முன்னால்

1969 - கால்பந்தாட்டப் போரை முடிவுக்குக்கொண்டுவந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கால்பந்தாட்டப்போர் என்பது, 1969இல் ஹோண்டுராஸ், எல்சால்வடார் நாடுகளுக்கிடையே நடைபெற்ற போராகும். 1970 பிஃபா உலகக்கோப்பைப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான இரு தகுதிச்சுற்றுப் போட்டிகள் இந்த இரு நாடுகளுக்கிடையே 1969 ஜூனில் நடைபெற்றன. ஹோண்டுராசில் நடைபெற்ற போட்டியில் ஹோண்டுராசும், எல்சால்வடாரில் நடைபெற்ற போட்டியில் எல்சால்வடாரும் வெற்றிபெற்றதால் ஏற்பட்ட சமநிலையை முடிவுக்குக்கொண்டுவர மெக்சிக்கோவில் மற்றொரு போட்டி நடத்தப்பட்டு, எல்சால்வடார் வென்றது. முதலிரண்டு போட்டிகளின்போதே ரசிகர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், மூன்றாவது போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, ஹோண்டுராசுடனான உறவுகளை முறித்துக்கொண்ட எல்சால்வடார், பயணிகள் விமானங்களில் ஆயுதங்களைப்பொருத்தி, ஜூலை 16இல் ஹோண்டுராஸ்மீது வான்வழித்தாக்குதலைத் தொடங்கியதால் இது கால்பந்தாட்டப்போர் என்று அழைக்கப்பட்டாலும், பின்னணியில் வேறு காரணங்களிருந்தன. எல்சால்வடார் சிறிய நாடு. ஹோண்டுராசின் நிலப்பரப்பு, எல்சால்வடாரைப்போல 5 மடங்கு. ஆனால், அதன் மக்கள்தொகை ஹோண்டுராசைப்போல ஒன்றரை மடங்கு.

இதனால் காலப்போக்கில் ஏராளமான சால்வடாரன்கள் ஹோண்டுராசில் குடியேறி, அதன் மக்கள்தொகையில் 20 சதவீதமாகியிருந்தனர். ஹோண்டுராசின் பெரும்பகுதி நிலம் பெருநிலக்கிழார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்தது. இங்கு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வாழைக்குடியரசு என்ற சொல்லாடல் உருவாகக் காரணமாகவிருந்த (இத்தொடரில் 2018 ஜனவரி 3) யுனைட்டட் ஃப்ருட் கம்பெனி மட்டும் ஹோண்டுராசின் 10 சதவீத நிலத்தைக் கொண்டிருந்தது. சால்வடாரன்களால் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாக இவர்கள் அளித்த நெருக்குதலால், நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில், குடியுரிமை பெற்றிருந்தவர்கள் உட்பட சால்வடாரன்களை வெளியேற்றியது ஹோண்டுராஸ் அரசு. நீண்டகாலம் அங்கிருந்து, ஹோண்டுராசன்களை மணமுடித்திருந்தவர்கள் உட்பட வெளியேற்றப்பட்டது, சால்வடாரில் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில்தான் போர் ஏற்பட்டது. அமெரிக்க(கண்டங்களிலுள்ள) நாடுகளின் கூட்டமைப்பிடம் ஹோண்டுராஸ் முறையிட, அது ஜூலை 18இல் கூடி, போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில் இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் எல்சால்வடாரில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தி, 1979இல் உள்நாட்டுப்போர் ஏற்படவும் காரணமாயின.