tamilnadu

img

இந்நாள் டிச. 27 இதற்கு முன்னால்

537 - கட்டிடக்கலையின் வர லாற்றை மாற்றியமைத்த கட்டிட மாகக் குறிப்பிடப்படும் ஹேகியா சோஃபியா, கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளில் பேரரசர் ஜஸ்டீனியனால் திறக்கப்பட்டது. பைசாந்தி யக் கட்டிடக்கலையின் உச்சமென்று புகழப்படும் இந்தப் பேராலயம், 1520இல் செவில் பேராலயம் கட்டப்படும்வரை, 269 அடி நீளம், 240 அடி அகலம், 180 அடி உயரத்துடன், உலகின் மிகப்பெரிய கட்டிடமாகத் திகழ்ந்தது. 532இல் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் 10 மாதங்களில் கட்டப்பட்ட இது, அக்காலத்திய தேவாலயங்களைப் போல் பெரிய கற்களால் கட்டப்படாமல், செங்கல் கட்டிடமாக கட்டப்பட்டது. செங்கற்களுக்கிடையில், மணலும், நுண்ணிய பீங்கான் துகள்களும் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்திய கான்க்ரீட் அளவுக்கு உறுதியானதாக இக்கலவை அக்காலத்தில் கருதப்பட்டது. திறக்கப்பட்டுவிட்டாலும், மொசைக் ஓவியங்கள் அமைப்பது, சுமார் 30 ஆண்டுகள் கழித்து, பேரரசர் இரண்டாம் ஜஸ்டின் காலத்தில்தான் நிறை வுற்றது.

திறக்கப்பட்டதிலிருந்து 1453வரை, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு, கிழக்கத்திய பழைமைவாத திருச்சபையின் தலைமைப் பேராலயமாகவும், கிறித்தவ ஒன்றிப்பின் தலைமையிடமாகவும் இது விளங்கியது. இடையில், நான்காம் சிலுவைப் போரின்போது, 1204இல் கத்தோலிக்கர்களால் கைப்பற்றப்பட்டு 1261வரை கத்தோ லிக்கப் பேராலயமாக மாற்றப்பட்டிருந்தது. ஹேகியா சோஃபியா என்றால் கிரேக்க மொழியில் புனித அறிவு என்று பொருள். 1453இல் 21 வயதேயான ஒட்டோமான் பேரரசர் இரண்டாம் மெஹ்மூத் கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளைக் கைப்பற்றி, இஸ்தான்புல்-லாக்கியபோது, சேதப்படுத்தப்பட்ட நகரின் பல பகுதிகளும் அப்படியே கைவிடப்பட்டாலும், இந்த மாபெரும் கட்டிடத்தின்மீதான ஈர்ப்பு, இதனை மசூதியாக மாற்றி,  பராமரிக்கச் செய்தது. கிறித்தவ மொசைக் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டு, அல்லது, மூடப்பட்டு, மசூதிக்கான சில அமைப்புகள் சேர்க்கப்பட்டதைத்தவிர, வேறு மாற்றங்கள் செய்யப்படாமல் இது பாதுகாக்கப்பட்டது.

1616இல் சுல்தான் அஹ்மெத் மசூதி திறக்கப்படும்வரை, இத்தான்புல்லின் முதன்மை மசூதியாக இது இருந்தது. துருக்கி விடுதலையடைந்தபின், 1931இல் மூடப்பட்ட இந்த மசூதி, 1935இல் மதச்சார்பற்ற ஓர் அருங்காட்சியகமாகத் திறக்கப்பட்டது. ஹேகியா சோஃபியாவிற்கு முன்பு அதே இடத்தில், 360இல் திறக்கப்பட்ட தேவாலயம் 404இலும், 415இல் கட்டப்பட்ட தேவாலயம் 532இலும் எரிக்கப்பட்டுள்ளன. முதல் தேவாலயத்தின் எச்சங்கள் எதுவுமில்லாத நிலையில், இரண்டாவது தேவாலயத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கி, மத வழிபாடு தடைசெய்யப்பட்ட அருங்காட்சியமாகவுள்ள இதற்கு ஆண்டுக்கு 33 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்!

- அறிவுக்கடல்