1964 - ஆழ்கடல் நீர்மூழ்கி வாகன மான(டிஎஸ்வி), ஆல்வின் பயன்பாட்டுக்கு வந்தது. நீர்மூழ்கிக் கப்பல்களால் ஆழ்கடலிலுள்ள நீரின் அழுத்தத்தை தாங்க முடியாது. மிகுந்த ஆழமான பகுதிகளிலுள்ள உயிரினங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காக டிஎஸ்வி-க்கள் உருவாக்கப்பட்டன. பறப்பதன்மீது இருந்ததைப் போலவே, கடலின் அடியிலுள்ள அற்புதங்களை ஆய்வு செய்யும் வேட்கையும் மனிதர்களுக்கு பண்டைய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. அத்துடன், பழங்காலத்திலேயே கப்பல்கள் உருவாகிவிட்டதால், கடலுக்கடியிலிருந்து அவற்றைத் தாக்குவதற்காகவும் நீரில் மூழ்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கி.மு.4ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தும் வசதிகள் இல்லாவிட்டாலும், காற்று நிரம்பிய கொப்பரை போன்ற அமைப்புடன்கூடிய, மூழ்கும் மணிகள் என்பவை பற்றி அரிஸ்ட்டாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
(கி.பி.)1300களில், பாரசீகத்தில் ஆமை ஓட்டுக்குள் நுழைந்துகொண்டு மூழ்கியிருக்கிறார்கள். இன்னும் பல்வேறு விதமான அமைப்புகள், நீரில் மூழ்குவதற்காக வரலாறு முழுவதும் முயற்சிக்கப்பட்டுள்ளன. ‘பாத்திஸ்கேஃப்’ என்ற பெயரில், கடலடி ஆய்வுக்காக 1948இலிருந்து அவ்வப்போது உருவாக்கப்பட்ட தொடக்ககால அமைப்புகள் அழுத்தம் தாங்கும் அமைப்புடன், இரும்பு குண்டுகளின் எடையைப் பயன்படுத்தி மூழ்கி, அவற்றை விடுவிப்பதன்மூலம் மேலெழுந்தன. இரண்டு ஆய்வாளர்கள், ஓர் இயக்குபவர் ஆகியோருடன், சுமார் 15 ஆயிரம் அடி ஆழம்வரை செல்லக்கூடியதான ஆல்வின், இத்துறையின் மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்ததுடன், இதன் திறன்கள் ஆல்வின் கிளாஸ் என்ற சீர்தரமாகவும் பின்பற்றப்பட்டன.
அட்லாண்ட்டிஸ் என்ற கப்பலிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க கடற்படைக்காக உருவாக்கப்பட்ட இது, கடலடியில் மாதிரிகள் எடுக்க எந்திரக் கைகளும் கொண்டிருக்கிறது. மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பல் ஆய்வு உட்பட, ஐந்தாயிரம் முறைகளுக்குமேல் கடலடிக்குச் சென்று திரும்பியதன் மூலம், ஆல்வின் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உருவாக உதவியுள்ளது. நீர்மூழ்கி விபத்துகளில் சிக்குபவர்களை மீட்பதற்காக, டிஸ்வியைப் பின்பற்றி, ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு வாகனம் (டிஎஸ்ஆர்வி), உருவாக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கிகளில் வந்ததைப்போன்றே, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் டிஎஸ்விக்களிலும் ஏராளமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்துள்ளதுடன், கப்பலிலிருந்தோ, அருகிலுள்ள கரையிலிருந்தோ இயக்கும் வகையிலும் உருவாக்கப்படுகின்றன.
- அறிவுக்கடல்