tamilnadu

img

இந்நாள் ஜுலை 21 இதற்கு முன்னால்

கி.மு.356 - பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிற, ஆர்ட்டெமிஸ் கோயில், நாசவேலையால் அழிக்கப்பட்டது. தன் பெயரை உலகறியச் செய்வதற்காக, ஹிரோஸ்ட்ரேட்டஸ் என்பவர், இதற்குத் தீவைத்தார். இதனால், கெட்ட வழியிலாவது புகழடைய வேண்டும் என்று முயற்சிப்பதை ஹிரோஸ்ட்ரேட்டிக் புகழ் என்றழைக்கும் பழக்கம் உருவானது. இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதுடன், ‘நினைவுகூரத் தடை’ உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதாவது, பெயர் பெறுவதற்காக அழிவு வேலையில் ஈடுபட்ட அவரது பெயரை எங்குமே குறிப்பிடக்கூடாது. ஹிரோஸ்ட்ரேட்டசுக்காகத் தொடங்கப்பட்ட இத்தண்டனை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதுடன், பண்டைய ரோம சமூகத்தில் மரணத்தைவிடப் பெரிய தண்டனையாகவும் கருதப்பட்டது. ஆர்ட்டெமிஸ் என்பவர், வேட்டை, வனம், விலங்குகள், நிலவு, கற்பு ஆகியவற்றுக்கான கிரேக்க பெண் கடவுள்.

இவர் அப்பல்லோவுடன் இரட்டையராகப் பிறந்த சகோதரி! இக்கோயில் அமைந்திருந்த பண்டைய ஈஃபிசஸ், தற்போது துருக்கியிலுள்ள செல்ஜூக் நகரமாகும். இந்த இடத்தில், கி.மு.8ஆம் நூற்றாண்டிலேயே முதல் கோயில் அமைக்கப்பட்டு, கி.மு.7ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் அழிந்துவிட்டது. பின்னர் கி.மு.550இல், 377 அடி நீளம், 151 அடி அகலம், 40 அடி உயரத்துடன் சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த இரண்டாவது கோயிலின் கூரை மட்டும் மரத்தாலானது. இதுதான், சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட முதல் கிரேக்கக் கோயிலாகக் கருதப்படுகிறது. இது அழிக்கப்பட்ட நாளில்தான் மகா அலெக்சாண்டர் பிறந்தார். இதை மீண்டும் கட்டுவதற்கு நிதியுதவி செய்ய அலெக்சாண்டர் முன்வந்தாலும், ஈஃபிசஸ் மக்கள் ஏற்க மறுத்து, அலெக்சாண்டரின் மறைவுக்குப்பின் கி.மு.323இல் மீண்டும் கட்டத் தொடங்கினர்.

பல ஆண்டுகள் கட்டப்பட்ட இந்த மூன்றாவது கோயில் 451 அடி நீளமும், 225 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்டு முந்தையதைவிடப் பெரிதாக அமைக்கப்பட்டது. கி.பி.268இல் கோத் என்னும் கிழக்கு ஜெர்மானியப் பழங்குடியினரின் படையெடுப்பில் சேதப்படுத்தப்பட்டாலும், பயன்பாட்டிருந்த இக்கோயில், கிறித்தவத்தின் எழுச்சியைத் தொடர்ந்து 407இல் அவர்களால் மூடப்பட்டது. இதன் வேலைப்பாடுகொண்ட தூண்கள் பலவும், இஸ்தான்புல்லில் (1453இல் மசூதியாக்கப்பட்டு, 1935இலிருந்து அருங்காட்சியமாகவுள்ள) ஹேகியா சோஃபியா தேவாலயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழுமையாக அழிந்துவிட்ட இக்கோயிலின் எச்சங்கள், ஆறாண்டுகள் தேடலுக்குப்பின் 1869இல் கண்டுபிடிக்கப்பட்டன.