கோடைக்காலத்தில் கொரோனா பாதிப்பு முடிந்துவிடும் என கிரீஸ் கருதுகிறது. இந்நிலையில் ஜூன் 15 முதல் சுற்றுலா நடவடிக்கைகள் தொடங்கவும் ஜூலை முதல் சர்வதேச விமானங்கள் வந்து செல்லவும் அனுமதிக்கப்படும் என பிரதமர் கிரியாகோஷ் அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் இப்போதுதான் கொரோனா பரவத் துவங்கு கிறது; அந்நாடுகளுக்கு மருத்துவம் மற்றும் உணவு உதவிகளை அளிக்க சர்வதேச அளவில் செயல்திட்டம் உருவாக்க நாடுகள்
உதவிட வேண்டுமென ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குடேரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 50லட்சத்தை தாண்டியிருக்கிறது. 3 லட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகமானோர்பலியாகியுள்ளனர் எனவும் 188 நாடுகளில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என ஜான் ஆப் கிங்ஸ் பல்கலைக்கழக தகவல் கூறுகிறது.
சீனாவின் வுகான் நகரில் 5 ஆண்டுகளுக்கு காட்டுவிலங்குகளை வேட்டையாடுவது, வணிகரீதியாக விற்பனை செய்வது, அவற்றின் இறைச்சியை நுகர்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான காரணங்களுக்கு மட்டும் இது அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏப்ரல் 25 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இது ஜூன் 20க்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது அன்றைய தினமும் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்தும், அதனால் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பசிக்கொடுமை யிலிருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டிய சவாலை தமது அரசு எதிர்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். விரைவில் ஊரடங்கை தளர்த்த வேண்டிய நிலைமை இருப்பதாக தெரிவித்துள்ளார்.\
ஐரோப்பிய நாடுகளில் கோவிட் 19 பாதிப்பின் இரண்டாவது பெரிய அலை கட்டாயம் உருவாகும் என்றும் அதற்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தயாராக இருக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநர் டாக்டர் ஆன்ட்ரியா அம்மோன் தெரிவித்துள்ளார். ஊரடங்கை தளர்த்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனில் கொரோனா மரணம் சுமார் 36ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் தீவிரமான பரிசோதனைகள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், உலகில் வேறு எங்கும்
இல்லாத அளவில் 1,76,216 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா மரணம் நிகழ்ந்துவருகிறது. இது அந்நாட்டு மக்களை உலுக்கியுள்ளது. இங்கு கொரோனாபாதிப்பு சுமார் 3லட்சத்தை தொடுகிறது. லத்தீன் அமெரிக்காவில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இருக்கிறது.
நேபாள அரசு, இந்திய எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளையும் இணைத்து புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இது, வரலாற்று உண்மைகளையும் ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியிடப்பட்டுள்ள வரைபடம் என்றும் இதை ஏற்க முடியாது என்றும் இந்தியா கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு உலுக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலும்கூட, சீனாவுக்கு எதிராக தைவானை தூண்டிவிடும் வேளையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. தைவான் ஜனாதிபதி த்சாய்யிங்-வென்னின் இரண்டாவது ஆட்சிக்காலம் துவங்கி யிருப்பதையொட்டி அவருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாம்பியோ பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் இல்லாமல் அப்பிராந்தியம் முழுவதும் “ஜனநாயகத்தை” கொண்டுவருவோம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கருத்து ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடிக்கும் என்ற பின்னணியில் 2021 வரை நேரடி வகுப்புகளை ரத்து செய்து பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் கல்வி நிறுவனம் இது.
சீனா மற்றும் இத்தாலியிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியதைவிட, இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குள் வந்தவர்களால்கொரோனா வைரஸ் பரவிய வேகம் அதிகமாக இருக்கிறது என்று நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒளி கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து வருபவர்களை முறையான பரிசோதனை இல்லாமல் அனுமதிக்க வேண்டாம் என்று உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவிட் 19 பெரும் தொற்று நோய் பரவல் மற்றும் அதனால் எழுந்துள்ள பிரச்சனைகளைப் பயன்படுத்தி உலக நாடுகளின் சர்வதேச தலைவன் என்ற இடத்தை எப்படியேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற சிந்தனை ஏதும் தங்களுக்கு இல்லை என்று சீனா கூறியுள்ளது. உலகநாடுகள், கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என்று சீன அரசின் செய்தி தொடர்பாளர் குவோ வெய்மின் கூறியுள்ளார்.
அறிவியல் பூர்வமான உண்மைகள் ஆணித்தரமாக வெளியான பின்னரும் கூட, கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று மீண்டும் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறார். சீனாவுடனான உறவுகளை துண்டித்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பாலஸ்தீனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரையிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட அனைத்து உடன்பாடுகளிலிருந்தும் விலகிக்கொள்கிறோம் என்று பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அபாஸ் கூறியுள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஆக்கிரமித்துள்ள அனைத்துப் பகுதிகளையும் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்வோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அராஜகமாக அறிவித்துள்ள பின்னணியில் முகமது அபாஸின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.