உலகில் மூன்றில் ஒரு பதின் பருவ சிறுமி பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை யுனிசெப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க உள்ள ஏழைக்குடும்பங்களில் குழந்தைகளுக்கான கல்வி என்பது பெரும் சவாலாவே உள்ளது. இந்நிலையில் உலகக்கல்வி கூட்டமைப்பில் அதிகாரிகள் கூடிப்பேசிய போது சில புள்ளி விபரங்கள் வெளியாகின. இதுகுறித்து யுனிசெப் நிறுவனம் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
''வறுமை, பாலினச் சமத்துவமின்மை, உடல் ஊனம், பயிற்று மொழி, வீட்டில் இருந்து நெடுந்தொலைவில் பள்ளிகள், மோசமான அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகியவற்றால், ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. 42 நாடுகளை ஆய்வு செய்தபோது, 20 சதவீத பணக்காரக் குழந்தைகளின் கல்விக்குச் செலவழிக்கப்படும் தொகை, 20 சதவீத ஏழைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவழிக்கப்படும் தொகையின் இரண்டு மடங்கைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்காவில் இந்த ஏற்றத்தாழ்வு 4 மடங்கு அதிகமாக உள்ளது. பார்படோஸ், டென்மார்க், அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் மட்டுமே கல்விக்கான செலவழித்தல் இரு புறங்களிலும் சமமாக உள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி, குறைந்தபட்ச மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடக்கப் பள்ளியை முடிக்கும்போது எளிய கதை ஒன்றைக்கூட வாசிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.
இதனால் அரசு நிதி ஒதுக்கீட்டின்போது, ஏழை மக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது நிதியளிப்புக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்''. இவ்வாறு யுனிசெஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்ரியட்டா ஃபொரே கூறும்போது, ''மிகவும் வறுமையான குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் உலக நாடுகள் தோல்வியைச் சந்திக்கின்றன. பொதுக் கல்விக்கான செலவை விட, பணக்காரக் குழந்தைகளுக்கான செலவு விகிதம் அளவுக்கு மீறிய வகையில் திரிந்திருக்கிறது. வறுமையில் இருந்து தப்பிக்க ஏழைகளுக்கு உள்ள ஒரே வழி கல்விதான். அதில்தான் அவர்கள் புதியன கற்று, போட்டி போட்டு, இந்த உலகில் வெற்றி கொள்ள வேண்டும்'' என்றார்.