புதுதில்லி:
இணையதள வசதியைத் துண்டித்துவிட்டு, யாருக்காக, ‘ட்வீட்’ போடுகிறீர்கள்? என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019’-க்கு எதிராக, அசாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்டமாநிலங்களில், கடந்த ஒருவார காலமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசு காஷ்மீரில் செய்தது போல இரண்டு மாநிலங்களிலும் ராணுவத்தினரை குவித்து மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், தங்களின் அராஜகமும், மக்களின் போராட்ட செய்திகளும் வெளியில் பரவாமல் தடுக்க, இந்த மாநிலங்களில் இணைய சேவையையும் முடக்கியுள்ளது.
இவ்வளவையும் செய்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதி விட்டிருந்தார். அதில்,“அசாமில் உள்ள எனதுசகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை மசோதா குறித்து நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும் பறிக்க முடியாது. மேலும், அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ன்படி மாநில மக்களின் மொழி,கலாச்சார, நில உரிமைகள் பாது காக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இதனைக் குறிப்பிட்டுத்தான் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியைச் சாடியுள்ளது. “அசாமில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகள் உங்களின் உறுதியை படிக்க முடியாது மோடிஜி. ஏனென்றால், அவர்களின் இணைய சேவையைத்தான் துண்டித்து விட்டீர்களே..” என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.