சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்
புதுதில்லி, ஜன.17- அமைதியான முறையில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று உத்தரப்பிரதேச மாநில அரசு ஒரு ‘போலீஸ் ராஜ்ஜியமாக மாறி யிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தலைநகர் தில்லியில், ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ வளாகத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம், மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் டிசம்பர் 19 அன்று கிளர்ச்சிப் போராட்டம் நடந்த சமயத்திலும், அதற்குப் பின்பும், உத்தரப்பிரதேச மாநில அரசு அதனை நசுக்கிட மேற்கொண்ட கொடூரமான நடவடிக் கைகள் குறித்து ஆழ்ந்த கவலைக்குள்ளாகி இருக்கிறோம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அரசமைப்புச்சட்டத்திற்கு முரணான, அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான இச்சட்டத்திற்கு எதிராக மக்களின் மகத்தான எழுச்சி நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட கிளர்ச்சிப் போராட்டத்தின் மீது காவல்துறையி னரின் வன்முறை வெறியாட்டங்களை மாநில பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இப்போராட்டத்தை எதிர் கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு பழிக்குப்பழி வாங்குவோம் என்று அவர் கொக்கரித்தார். ஜனவரி 19இலிருந்து கடந்த மூன்று வார கால மாக நுற்றுக்கணக்கானவர்களை எவ்விதக் காரணமுமின்றி கைது செய்து, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதத்தின் அடிப்படையில் ஒருவருக்குக் குடியுரிமை அளித்திட வகைசெய்யப்பட்டி ருக்கிறது. இது நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதும், எதிரானதுமாகும். 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குடியுரிமை பெறு வதற்கு முதன்முறையாக மதம் ஒரு காரணியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பது ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகவும், எதிரானதாகவும் ஆக்கப் பட்டிருப்பதால்தான், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தி ருக்கிறார்கள். இப்போராட்டமானது இந்தியாவில் நாட்டுப் பற்றைப் பிரதிபலிப்பதன் மிக உயர்ந்த வடிவ மாகும். ஆனால் ஆட்சியாளர்கள் என்ன சொல்கி றார்கள்? குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என்றும், அவர்கள் பாகிஸ்தானின் குரலை இங்கே எதிரொலிக்கிறார்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். என்னே முட்டாள்தனம்! நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும், உ.பி. முதலமைச்சரும் கிளர்ச்சியாளர்கள் மீது இப்படித்தான் பாய்ந்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய போராட்டங்களில், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 21 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் - உ.பி., அசாம் மற்றும் கர்நாடகா மாநில மக்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வன்முறை நிகழ்வுகள் கிடையாது.
பாஜக ஆளும் மாநில அரசுகள் மட்டும்தான், அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட் டங்களில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை வெறி யாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக தலைவர், குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்க ளை நாயைச் சுட்டுத்தள்ளுவது போல சுட்டுத் தள்ள வேண்டும் என்று கூச்சல் போட்டுள்ளார். உ.பி.யில் ஓர் அமைச்சர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்திடுவோம் என்று கொக்கரித்திருக்கிறார். உ.பி.யில் போலீசாரே சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு, அப்பாவி மக்கள் மீது இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு ‘போலீஸ் ராஜ்ஜியமாக’ (Police State) உ.பி. மாறியிருக்கிறது. இது நிச்சயமாக நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதி ரானதாகும். நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடி யரசுக்கு எதிரானதாகும்.
உ.பி. மாநில அரசு முஸ்லிம்களை மட்டும் வேட்டையாடவில்லை. வாரணாசியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வர்கள் 63 பேர். இவர்களில் 13 பேர் மட்டுமே முஸ்லிம்கள். மற்றவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். மேலும் இச்சந்திப்பில், உத்தரப்பிரதேச மாநி லக் காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜென ரல் (ஓய்வு) எஸ்.ஆர். தாராபுரி, நடிகையும் சமூகச் செயற்பாட்டாளருமான தஸ்தக் சதாப் ஜாபர், மற்றும் அமெரி கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் டாக்டர் பவார் அம்பேத்கர் முதலானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எடுத்துரைத்தார்கள். இவர்கள் அனைவரும் ஜனவரி 19 அன்று கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கண் மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளானவர்கள். இக்கூட்டத்தில் பிருந்தா காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, சரத் யாதவ்(ஐக்கிய ஜனதா தளம்), மனோஜ் ஜா (ஆர்ஜேடி) முதலானவர்களும் உரையாற்றினார்கள்.
மக்கள் நடுவர் மன்றம் தீர்ப்பு
இதனிடையே, உத்தரப்பிரதேச போலீஸ், அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவி யுள்ளது என்றும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது என்றும் மக்கள் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தில்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி, பேராசிரியர் இர்பான் ஹபீப் ஆகியோரை நடுவர்களாக உள்ளடக்கிய மக்கள் நடுவர் மன்றம், உத்த ரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இயக்கம் நடைபெற்றதைத் தொடர்ந்து உ.பி. காவல்துறையினருடன் ஏற்பட்ட அனுபவங்களை சமூகச் செயற் பாட்டாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் முதலானவர்களிடம் கேட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் நடுவர் மன்றத்தின் நடுவர் தீர்ப்பில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள விவகாரங்கள் அங்கே சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக சீர் குலைந்திருப்பதைக் காட்டுகின்றன. உண்மை யில், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய மாநில அரசு நிர்வாகம், தன் சொந்த மக்கள் மீதே வன்முறை வெறியாட்டங்களை ஏவியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் நடுவர் மன்றத்தில் முன் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட வர்களில் காங்கிரஸ் ஊழியரும், நடிகையுமான சதாப் ஜாபர் ஒருவர். இவர் தான், டிசம்பர் 19 அன்று, லக்னோவில் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதனை வீடியோ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும், காவல்துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மக்கள் நடுவர் மன்ற நிகழ்வை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தில்லி அறிவியல் கழகம் உட்பட பல அமைப்புகள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. (ந.நி.)