tamilnadu

img

அலகாபாத் திருவள்ளுவர் சிலைக்கு அனுமதி மறுத்த உ.பி. அரசு

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் திருவள்ளுவரின் சிலை அமைப்பதற்கு, அம்மாநில பாஜக அரசு அனுமதிதொடர்ந்து மறுத்து வருவது தெரிய வந்துள்ளது.அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியையும், பாஜக முதல்வர் ஆதித்யநாத் ரத்து செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திரிவேணி சங்கமம் நிகழும் அலகாபாத்தில், மொழிகளின் சங்கமத்தையும் ஏற்படுத்தும் நோக்கில், அங்குள்ள அறிஞர்கள் கூடி மொழிகள் சங்கம் (பாஷா சங்கம்) எனும் அமைப்பை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், தமிழ்ப்புலவர் வள்ளுவப் பேராசானுக்கு சிலை வைக்கும் முயற்சியில் கடந்த 29 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளனர். அதற்கு பலனும் கிடைத்துள்ளது. அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில், 2017-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பாஷா சங்கத்தினரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அவ்வாண்டு ஜூலை 10-ஆம் தேதி தென்கரை சாலைக்கு ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க் (தமிழ் அய்யன் திருவள்ளுவர் சாலை)’ என்ற இந்தி, தமிழ் கல்வெட்டுக்களை ‘இன்மா இண்டர்நேஷனல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் திறந்து வைத்துள்ளார். அத்துடன் ஜனவரி 15-இல் திருவள்ளுவர் நாளன்று, அவருக்கு சிலை எழுப்புவதற்கு ரூ. 1 லட்சம் முன்பணமும் அளித்துள்ளார். ஆனால், இடையிலேயே உத்தரப்பிர தேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு தடை விதித்துள்ளது. தடை தொடர்பாக, சம்பந்தப்பட்ட பாஷா சங்கத்தினர் முதல்வர் ஆதித்யநாத்தை பலமுறை சந்திக்க முயன்றுள்ளனர். ஆனால், இந்த சந்திப்பிற்கும் கூட அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார் பாஷா சங்கத்தின் பொருளாளர் சந்திரமோகன் பார்கவா. பாஷா சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜனும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். “திரிவேணி சங்கமம் அருகே ‘அரைன் காட்’ எனும் இடத்தில் உள்ள சச்சா பாபா ஆசிரமத்தின் உள்ளே திருவள்ளுவர் சிலை வைத்துக் கொள்ள அதன் தலைவர் சுவாமி கோவிந்த தாஸ் முன்வந்தார்; அவ்வாறு ஆசிரமத்திற்குள் சிலையை வைத்தால், திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட சமயத்தின் அடையாளம் வந்துவிடும்” என்று கருதி அதற்கு மறுத்து விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.