புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 17-வயது இளம் பெண்ணை பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார், தனது சகோதரருடன் சேர்ந்து கும்பலாக பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கினார். இவ்விஷயத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், தன்னை மாற்றிக்கொள்ளாத செங்கார், கடந்த ஜூலை 28-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரியை ஏற்றிக் கொலைமுயற்சியிலும் ஈடுபட்டார்.
இதில் பெண்ணின் தாயார் இறந்துவிட, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த வழக்கை விசாரித்து வரும் தில்லி உயர் நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை அரங்கில் தற்காலிக நீதிமன்றம் அமைத்து, அங்கேயே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமையன்று நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார். எம்எல்ஏ செங்காரும் அப்போது ஆஜர்படுத்தப்பட்டார்.முன்னதாக விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவுப்படி சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன. நீதிபதியின் கேள்விகளுக்கு இளம்பெண் பதிலளித்தார். அவற்றை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.