1799 - ரோசெட்டா கல் என்று குறிப்பிடப்படும் கி.மு.2ஆம் நூற்றாண்டு காலக் கல்வெட்டு, எகிப்தின் ரோசெட்டா(தற்போதைய ரஷீத்) என்ற துறைமுக நகரில், ஃப்ரெஞ்ச்சுப் படையின் பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தின் தொன்மையான சிறப்புகளை அறிந்திருந்த பேரரசர் நெப்போலியன், 1798இல் எகிப்தின்மீது படையெடுத்தபோது, பண்பாட்டு, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பாக மீட்க, 167 தொல்லியல்துறை நிபுணர்கள்கொண்ட ஒரு குழுவையும் ராணுவத்துடன் அனுப்பியிருந்தார். அதே நோக்கத்துக்காக, கெய்ரோவில் நெப்போலியன் 1798இல் உருவாக்கியிருந்த எகிப்திய அறிவியல் கழகத்தில் இந்தக் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டது.
மூன்று மாறுபட்ட எழுத்து வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கல் உண்மையில் முழுமையாக இன்றி, உடைந்திருந்ததுடன், ஆய்வாளர்கள் முயற்சித்தும் அதன் எஞ்சிய பகுதிகள் கிடைக்கவில்லை. முதற்பகுதி எகிப்திய ஹெய்ரோக்ளைஃப் என்னும் சமயம் சார்ந்த செய்திகளை எழுதும் புனித எழுத்துகளிலும், இரண்டாவது பகுதி பண்டைய எகிப்திய டிமோட்டிக் எழுத்துகளிலும், மூன்றாவது பகுதி கிரேக்கர்களால் ஆளப்பட்டதால் அலுவல் மொழியாக இருந்த கிரேக்கத்திலும் பொறிக்கப்பட்டிருந்தாலும், எந்த மொழியிலும் முழுத் தகவலும் கிடைக்காத அளவுக்குச் சேதமுற்றிருந்தது. மூன்று எழுத்து வடிவங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது ஒரே செய்தி என்றும், அது ஐந்தாம் தாலமியின் காலத்திய அரசு உத்தரவு என்றும் கண்டுபிடிக்கப்பட்டாலும், பண்டைய மொழிகளிலிருந்த அந்தச் செய்தியைக் கண்டுபிடிக்க 23 ஆண்டுகள் ஆயின.
1801இல் ஒட்டோமான் படைகளுக்கு உதவிக்குவந்து, அலெக்சாண்ட்ரியாவில் ஃப்ரெஞ்ச்சுப் படைகளைத் தோற்கடித்த இங்கிலாந்துப் படைகள் இதனைக் கைப்பற்றின. இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த அவர்கள், சரணடையும் ஒப்பந்தத்தின் கூறாகவே இதனைச் சேர்த்து, இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்ல, 1802இலிருந்து இது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. முதல் உலகப்போர்க் காலத்தில் குண்டுவீச்சில் சேதமுறாமலிருக்க, சுமார் 760 கிலோ எடையுள்ள இது, தரைக்கடியில் 50 அடி ஆழத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒரே செய்தியுள்ளவை ரோசெட்டா கல் என்றழைக்கப்படுகின்றன. பின்னாளில் இதன் பகுதிகளும், இதைப்போன்ற கல்வெட்டுகளும் கிடைத்தாலும், ஹெய்ரோக்ளைஃப் மொழியை அறிவதில் இது முக்கியப் பங்காற்றியதால், சங்கேத மொழிகளை மொழிபெயர்ப்பதற்கான முக்கியக்கூறு ரோசெட்டா கல் என்றே அழைக்கப்படுகிறது. தங்கள் வரலாற்றுச் சின்னம் என்று 2003இல் எகிப்து இதைக் கேட்டாலும், தர மறுத்துவிட்ட பிரிட்டிஷ் அருங்காட்சியகம், இதன் முழு அளவு நகலை உருவாக்கி, 2005இல் எகிப்துக்கு அளித்தது.
====அறிவுக்கடல்====